காதல் திருமணம் செய்த மறுநாளே ரூ.1 லட்சம், 50 பவுன் நகை வரதட்சணை கேட்ட புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காதல் திருமணம்
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே குருவராஜபாளையத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 19). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் (26) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கலைச்செல்வன் சென்னையில் வேலை பார்த்து வந்ததால் அவ்வப்போது காதலியை வந்து பார்த்து விட்டு செல்வார்.
இந்தநிலையில் கலைச்செல்வனுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். இதையறிந்த காதலி ரம்யா, காதலனிடம் இதுபற்றி கேட்டு கதறி அழுதுள்ளார். இதனையடுத்து கலைச்செல்வன் கடந்த 21–ந் தேதி காதலியை வாலாஜாவுக்கு அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
வரதட்சணை
பின்னர் அங்கிருந்து இருவரும் சென்னைக்கு சென்றுள்ளனர். இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் இருவரும் குருவராஜபாளையத்தில் உள்ள ரம்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அங்கு வந்த கலைச்செல்வன் காதல் மனைவி ரம்யாவிடம், திடீரென்று ரூ.1 லட்சமும், 50 பவுன் நகையும், மோட்டார் சைக்கிளும் வரதட்சணையாக தந்தால் மட்டுமே உன்னுடன் குடும்பம் நடத்துவேன். இல்லையென்றால் எனக்கு நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைகேட்ட ரம்யா அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ரம்யா ஆம்பூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட மறுநாளே மனைவியிடம் வரதட்சணை கேட்டு புதுமாப்பிள்ளை கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment