Tuesday, 25 June 2013

வங்கக் கடலில் எரிமலையா?: ஆய்வு



சென்ன: வங்கக் கடல் பகுதியில் 100 கி.மீ. ஆழத்தில் எரிமலை இருக்கிறதா என ஆய்வுகள் நடந்து வருகிறது. இதில் மூன்று நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1757ஆம் ஆண்டு, சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக ஒரு மாலுமி தமது பயணக் குறிப்பில் , எரிமலை வெடித்ததால், வங்க கடல் பரப்பில் கடல் நீரின் நிறம் மாறியது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில விஞ்ஞானிகளும் இணையதள பக்கங்களில் இதைப் பதிவு செய்திருப்பதுடன் வங்கக் கடலின் அடியில் பெயரிடப்படாத எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள எரிமலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் அமைப்பு ஒன்று விவரம் கேட்டிருந்தது. இது குறித்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கூறுகையில், அணுசக்தி ஆணையம், எரிமலை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. எனினும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகியவை வங்கக் கடலில் எரிமலை இருக்கிறதா? என்பதை அறியும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. அவ்வாறு சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டருக்குள் எரிமலை இருப்பதாக ஆய்வில் உறுதியானால், சென்னை முதல் புதுச்சேரி வரையில் கடல் பரப்புகள் பாதிப்பிற்குள்ளாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment