போதை - இந்த இரண்டு எழுத்தால் உலகமே தள்ளாடுகிறது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இது சமூகத்தை அழிக்கும் ஒரு "அரக்கன்'. பயன்படுத்துபவரை மட்டுமின்றி, குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் இது பாதிக்கிறது. இதுதான் அனைத்து நோய்களுக்கும் முன்னோடி. சிலர் இதற்கு அடிமையாக மாறிவிட்டனர். போதைப்பொருளைப் போலவே, அதை கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஜூன் 26ம் தேதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதை என்றாலே, பெரும்பாலானோர் மது மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது. எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்தி வாய்ந்தவை இப்போதை மருந்துகள். நம்ம ஊர் "டாஸ்மாக்' விற்பனையை "தூக்கி சாப்பிடும்' அளவுக்கு, இதன் வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின் , புகையிலை, மது , ஊக்க மருந்து, ஒயிட்னர் போன்றவை, இளைஞர்களிடம் வேகமாக பரவும் பழக்கங்களாக மாறி வருகின்றன. உடலை மட்டுமின்றி, மனதையும் சிதைத்து, குடும்பத்தையும் அழித்து, முடிவில் மரணத்துக்கே அழைத்து செல்பவை இவை.
உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது. போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு, அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது. போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, மறுவாழ்வு அளிக்க வேண்டும். விற்பனையை தடை செய்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும்.
போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985ன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ம் தேதி, தொடங்கப்பட்டது. இது நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் டில்லி. மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களில் செயல்படுகிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. இதை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து, மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment