தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்ஸ் ஒருவர் சூலாயுதத்துடன் நோயாளிகளை விரட்டினார். மற்ற நர்சுகள் ஓடி வந்து சூலாயுதத்தை பறித்து அவரை, அமைதிப்படுத்தினர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி நர்ஸ் சிவசுந்தரி,45, உடல் நலக்குறைவால், சில மாதங்களாக விடுமுறையில் இருந்தார். அவர், கடந்த 13 ம் தேதி மீண்டும் பணிக்கு வந்தார். அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ஏற்பட்ட முரண்பாட்டில், மீண்டும் விடுமுறையில் சென்று விட்டார். இந்நிலையில், அவர் குறிப்பிட்ட நாளில் பணியில் சேரவில்லை, என மருத்துவக் கல்லூரி நிர்வாகம்,"மெமோ' அனுப்பியது. இதனால், நேற்று மீண்டும் பணியில் சேர வந்தார். அப்போது, அதிகாரிகள், "சற்று காத்திருங்கள்' என கூறியுள்ளனர்.
மதியம் ஒரு மணிக்கு, வரண்டாவிற்கு வந்த நர்ஸ் சிவசுந்தரி, அங்கு நின்றிருந்த நோயாளிகளை தரக்குறைவாக,பேசி,செருப்புகளை எடுத்து வீசினார். இதனால், பீதியடைந்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்றிருந்த நோயாளிகள் சிதறி ஓடினர். அவர்களை துரத்தி ஓடிய சிவசுந்தரி, அங்குள்ள மரத்தடியில் இருந்த விநாயகர் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த சூலாயுதத்தை, அசைத்து கையில் எடுத்துக் கொண்டு, ஆவேசமாக நோயாளிகளை நோக்கி நடந்தார். அவர் வருவதை பார்த்து பயந்துபோன நோயாளிகள் சிதறி ஓடினர். இந்தபரபரப்பு 15 நிமிடத்திற்கு மேல் நீடித்தது. உடன் பணிபுரியும் நர்சுகள் ஓடி வந்து,சிவசுந்தரியை சமரசம் செய்து, ஓய்வறைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனை உயர் அதிகாரிகள் கூறுகையில்,"" சிவசுந்தரி கடந்த சில ஆண்டுகளாகவே, அடிக்கடி இப்படி நடந்துகொள்வார். நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தபோது, இப்படி நடந்து கொண்டதால், அங்கிருந்து இங்கு அனுப்பப்பட்டார். இங்கு நோயாளிகளுக்கு மாத்திரை கொடுக்க, அவரை அனுமதிக்க மாட்டோம். சமையல் பகுதிக்கு நியமித்து விட்டோம். சில நேரம் துப்புரவு பணியில் ஈடுபடுவார். ஏதாவது குளறுபடி செய்து கொண்டே இருப்பார். அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது, எதிர்த்து தகராறு செய்வார்.இவரது குடும்ப நிலை கருதி பணியில் வைத்துள்ளோம். குணமடைந்து விடுவார், என நினைத்தோம். ஆனால், தற்போது, நோயாளிகளை துரத்தி உள்ளார். இது குறித்து மருத்துவத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளோம்,'' என்றனர்
No comments:
Post a Comment