Thursday, 27 June 2013

சூனியம் வைப்பதாக கூறி மிரட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு


ஓமலூர் அருகே சுடுகாட்டில் சூனியம் வைப்பதாக கூறி மிரட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது காமுகனை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 63), விவசாயியான இவர் ஆடு மேய்த்து வருகிறார். மேலும், அங்குள்ள சுடுகாட்டில் தான் இவர் எப்போதும் ஆடு மேய்ப்பது வழக்கம். அந்த சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் இருப்பதால் இவர் உள்ளே இருப்பது யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில் சாமிநாயக்கன்பட்டியில் இருந்து பஸ் வசதி இல்லாததால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், மாணவ–மாணவிகளும் அந்த சுடுகாடு வழியாக நடந்து கரும்பாலை அல்லது அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல் கேட் பகுதிக்கு பஸ்சை பிடிக்க வரவேண்டும்.
பாலியல் தொந்தரவு
இப்படி சுடுகாடு வழியாக நடந்து செல்லும் 5 மாணவிகளை வெங்கடேசன் மிரட்டி சுடுகாட்டிற்குள் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுபற்றி யாரிடமேனும் சொன்னால், பில்லி–சூனியம் வைத்து பெற்றோரையும், அண்ணன்–தம்பிகளையும் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்துபோன மாணவிகள் இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை. மேலும், ஒவ்வொரு நாளும் சுடுகாட்டை கடந்து செல்லும்போதும் பயத்துடனேயே மாணவிகள் சென்று வந்துள்ளனர்.
திரண்ட பெற்றோர்
இதற்கிடையே, நேற்று  பள்ளிக்கு சென்ற ஒரு மாணவியை சுடுகாட்டிற்குள் அழைத்துசென்று வெங்கடேசன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி வீட்டிற்கு ஓடி வந்து பயத்துடன் காணப்பட்டார்.
இதை பார்த்த பெற்றோர் ‘ஏன் இப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டனர். ஆனால், முதலில் பதில் சொல்ல தயங்கிய மாணவி சிறிது நேரம் கழித்து நடந்து விவரத்தை பெற்றோரிடம் அழுதபடி கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாதிக்கப்பட்ட சக மாணவிகளின் பெற்றோர்களையும், ஊர் பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர்.
காமுகன் கைது
அங்கு இதுகுறித்து பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகேஸ்வரி விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர். சூனியம் வைப்பதாக கூறி மிரட்டி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது காமுகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment