Wednesday, 26 June 2013

கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தை கொலை தந்தை கைது;


தர்மபுரி:கள்ளிப்பால் கொடுத்து, பெண் குழந்தையை கொலை செய்ததாக, தந்தையை, போலீசார் கைது செய்துள்ளனர். தாய் மற்றும் பாட்டியிடம், விசாரணை நடக்கிறது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், ஏர்ரங்காட்டு கொட்டாயை சேர்ந்தவர் மாதேஷ், 30; கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலா, 27; இவர்களுக்கு, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்; நான்காவதாக, மாலா, கடந்த, 3ம் தேதி, பென்னாகரம் அரசு மருத்துவமனையில், பெண் குழந்தை பெற்றார்.
நேற்று முன்தினம், உடல் நல பாதிப்பால், குழந்தை திடீரென இறந்து விட்டதாக, மாதேஷ் தம்பதி, கிராம மக்களிடம் கூறி விட்டு, உடலை, அவசர அவசரமாக, வீட்டின் பின் பகுதியில் புதைத்தனர். இது குறித்து பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர் அமுதாவிடம், புகார் செய்தனர். அவர், பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், வறுமை காரணமாக, குழந்தையை, கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. மாதேஷை, கைது செய்துள்ள போலீசார், மாலா மற்றும் அவரது தாய் சின்னத்தாய் ஆகியோரிடம், விசாரிக்கின்றனர்.
கள்ளிப்பால் கொடுத்து, கொல்லப்பட்ட பெண் குழந்தை உடல், நேற்று மாலை, தோண்டி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment