உத்தியோகம் புருஷ லட்சணம் என்றாலும், அயல்நாட்டில் வேலை பார்ப்பதே மதிப்பு என்று எண்ணும் கேரளாவாழ் முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் அரபு நாடுகளில் வேலையில் இருக்கும் பையனுக்கே தங்கள் பெண்ணை மணமுடிக்கின்றனர். ஒரு மாதம் விடுமுறையில் வரும் மணமகன், திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து மீண்டும் பதினைந்து நாட்கள் கழித்து பணிக்குத் திரும்பிவிடுகின்றான்.
சில வருடங்கள் கழித்து அவன் மீண்டும் திரும்பிவரும்வரை, அந்தப்பெண் காத்திருக்க வேண்டியதுதான். அப்படியே வந்தாலும் இதேபோல் ஒரு மாத இல்லற வாழ்க்கை மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கின்றது. இதுபோன்ற வாழ்க்கை முறைகள் பெண்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதாக தற்போது பெற்றோர்கள் வருத்தப்படத் துவங்கியுள்ளனர்.
கேரளாவின் தென் பகுதிக் கரையோரம் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையான இளம்பெண்கள் இத்தகைய தனிமை வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசின் கணக்கீடுகளின் படி 50 சதவிகித ஆண்கள் ஐக்கிய அரபுக் குடியரசு அல்லது மற்ற அரபு நாடுகளில் வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.
திருமண வயது 18 என்றபோதிலும் நல்ல வரன் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே பல பெற்றோர்களும் தங்கள் பெண்களுக்கு 15 வயதிலேயே மணமுடித்து விடுகின்றனர். அதனால், இளம்வயதிலேயே பலரும் தாயாகி விடுகின்றனர். குடும்பப் பொறுப்புகளை சுமந்துகொண்டு தனிமையில் காலம் தள்ளுவது என்பது இப்போது இந்த திருமணபந்தத்தையும் சீர்குலைத்து விடுகின்றது
No comments:
Post a Comment