Wednesday, 26 June 2013

குடிகாரர்களால் பெண்களுக்கு தொல்லை நரிக்குறவர்கள் புகார்




காரைக்கால், : பெண்களுக்கு இடையூறாக இயங்கும் சாராய கடையை அகற்ற வேண்டும் என சப்கலெக்டரிடம், நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.
காரைக்கால் கோவில்பத்து அன்னுசாமி வாய்க் கால் குடியிருப்பில் வசிக்கும் நரிக்குறவ இனத்தவர்களான ஜெயராமன், உஷா, விஜயன், முரளி, சுரேஷ், அம்பிகா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர், எம்.எல்.ஏ திருமுருகன் தலைமையில், நேற்று முன்தினம் சப்.கலெக்டர் முத்தம்மாளிடம், சாராய கடையால் ஏற்படும் இடையூறு குறித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள், நிருபர்களிடம் கூறியது: 
காரைக்கால் கோவில்பத்து அன்னுசாமி வாய்க்கால் குடியிருப்பில், நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியினராகிய நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கோவில்பத்து சாரயக்கடை எண்.4 செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடித்துவிட்டு போதையில் வரும் ஆசாமிகள், நரிக்குறவர்கள் பெண்களிடம் வரம்பு மீறி பாலியல் தொல்லைகள் கொடுக்கின்றனர். எந்த நேரமும் குடிபோதையில் குடியிருப்பு பகுதியிலேயே படுத்துவிடுகின்றனர். இது எங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு சிலர் தகாத வார்த்தைகளை பேசுவதுடன், பெண்களின் கை மற்றும் ஆடையை பிடித்து இழுப்பது தொடர் கதையாக உள்ளது. எதிர்த்து கேட்பவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்குகின்றனர். இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், போலீசார் எங்களை திட்டுகின்றனர். புகாரை வாங்க மறுக்கின்றனர். எனவே, நரிக்குறவர்கள், குடியிருப்புவாசிகளுக்கும் இடையூறான சாராயக்கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று சப்கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், வீதியில் இறங்கி போராடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment