Friday, 14 June 2013

சில்மிஷம் செய்த சாமியாரை பெண் சாமியாடி குறி சொல்லி, சிக்க வைத்தார்.


வேலூர்: கோவில் திருவிழாவுக்கு வந்த போலிச் சாமியாரை அறிந்த பெண் ஒருவர், சாமியாடி குறி சொல்லி, போலீசில் சிக்க வைத்தார். வேலூர் மாவட்டம், கீழ் மச்சம்பட்டு கிராமத்தில், பாப்பார கங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை, 9:00 மணிக்கு, இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது, சின்னவரிகத்தைச் சேர்ந்த, ரமேஷ், 55, என்பவர், கோவில் கலசத்திற்கு பூஜை செய்து, அவர் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை, பூஜை கலசத்தில் போட்டார்.
அப்போது, மச்சம்பட்டை சேர்ந்த சித்ரா, 24, என்ற பெண் சாமியாடி, ரமேஷை பார்த்து, அவர் போலி சாமியார், யாக கலசத்தில் வேண்டாத பொருளை போட்டு நாசம் செய்ய முயற்சிப்பதாகவும், பெண்களை சில்மிஷம் செய்து, நகைகளை கொள்ளையடிக்க வந்திருப்பதாகவும், கூறினார்.
சித்ராவின் வாக்கை கேட்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், ரமேஷை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்; அவர் வைத்திருந்த ருத்ராட்ச மாலையை தீ வைத்து கொளுத்தினர். இதை பார்த்த போலீசார், ரமேஷை மீட்டனர்.
விசாரணையில், ரமேஷ், போலி சாமியார் என்பதும், கோவில் விழாக்கள், கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு, ருத்ராட்ச மாலையை காட்டி பெண்களை சில்மிஷம் செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து வந்ததும் தெரிந்தது.
ரமேஷ் குறித்து முன்பே அறிந்திருந்த சித்ரா, அவரை போலி சாமியார் எனக் கூறினால், பக்தர்கள் நம்ப மாட்டார்கள் என்பதால், அருள் வந்தது போல் நடித்து, ரமேஷ் குறித்த தகவலை நம்ப வைத்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. ரமேஷை கைது செய்த, ஆம்பூர் போலீசார், சித்ராவை பாராட்டினர்.

No comments:

Post a Comment