கோவை: திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பிறந்த குழந்தைகளை தவிக்க விட்டு செல்லும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் 6 சம்பவங்கள் நடந்துள்ளது.
* கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திருப்பூர் அருகே கே.செட்டிபாளை யத்தில் குப்பை தொட்டியில் குறை பிரசவத்துடன் பிறந்த ஒரு பெண் சிசு இருந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்குழந்தை இறந்தது.
* அக்டோபர் 21ம் தேதி, திருப்பூர் பாளையக்காடு ரயில்வே கேட் அருகில் ஒயர் கூடையில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தை பின்னர் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
* நவம்பர் 1ம் தேதி, திருப்பூர் மண்ணரை ஐஸ்வர்யா நகரில் 6 மாத குழந்தை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இக்குழந்தையின் பெற்றோர் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
* அடுத்த 2 நாட்களில் நவம்பர் 3ம் தேதி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை தவிக்கவிட்டு தாய் தப்பிச் சென்றார்.
* கடந்த பிப்ரவரி 10ம் தேதி, மங்களூரில் இருந்து சென்னை சென்ற வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒரு பெண், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 3 மாத குழந்தையை விட்டுச் சென்றார். அடுத்த சில நாட்களில் அப்பெண் இறந்தார். தற்போது அந்த குழந்தை கிணத்துக்கடவு அரசு காப்பக பராமரிப்பில் உள்ளது.
* கடந்த 14ம் தேதி திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் மனநிலை பாதித்த லட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிகிச்சைக்காக தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு குழந்தையை தவிக்க விட்டு லட்சுமி திடீரென மாயமானார்.
* கடந்த 15ம் தேதி திருப்பூர் ஆண்டிபாளை யம் அருகே ஒரு குப்பை தொட்டியில் அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு பெண் குழந்தை இருந்தது. அக்குழந்தை மீட்கப்பட்டு, கிணத்துக்கடவு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
* ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையை திருடி, வேறு ஒரு தம்பதிக்கு விற்பனை செய்த துப்புரவு பெண் பணியாளர் சிக்கினார். குழந்தையை விலைக்கு வாங்கிய கூட்டுறவு வங்கி முன்னாள் ஊழியரும், அவரது கணவரும் பிடிபட்டனர்.
* ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வந்த இளம்பெண் ஒருவர் திடீரென மரணமடைந்தார். அப்பெண்ணுடன் 6 வயது சிறுமி ஒருவரும் வந்துள்ளார். இறந்தது தனது அம்மா இல்லை என்று அச்சிறுமி கூறியுள்ளார். அச்சிறுமிக்கும், இறந்து போன பெண்ணுக்கும் என்ன உறவு என்று தெரியவில்லை. பிறந்த குழந்தையும், தற்போது 6 வயது சிறுமியும் பெற்றோரின்றி தவித்து வருகின்றனர்.சமீப காலமாக பிறந்த குழந்தையை தவிக்க விட்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, குழந்தை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிலரின் தவறான நடவடிக்கைகளால் குழந்தைகளின் நலன், எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இரக்க குணம் அதிகம் என்ற கருத்து உண்டு. ஆனால் பிறந்த குழந்தைகளை சாலையோரம், குப்பை கிடங்குகளில் பெற்ற தாயே தூக்கி வீசிச் செல்வது தேய்ந்து வரும் மனிதநேயத்தின் வெளிப்பாடா?
No comments:
Post a Comment