சென்னை : "தமிழகத்தில், நீரிழிவு நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவோர் குறைவாக உள்ளனர்' என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. "அசீர் ஹெல்த்' எனும் தன்னார்வ அமைப்பு, நீரிழிவு நோயாளிகளிடம், இந்நோய் குறித்து உள்ள விழிப்புணர்வு, நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவர்கள் காட்டும் ஆர்வம் ஆகியவை குறித்து அறியும் பொருட்டு, ஆய்வு நடத்தியது.
சென்னை, கோவை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில், 15 முதல், 80 வயதிற்கு உட்பட்ட, நீரிழிவு நோயாளிகள், 2,567 பேரிடம், ஆய்வு நடத்தப்பட்டது.
அவர்களிடம், "நீரிழிவு நோய் பரிசோதனையை, எப்போது மேற்கொண்டீர்கள்? உணவு அருந்துவதற்கு முன், பின், ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு, நீரிழிவு நோயின் வகைகள் தெரியுமா?' உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றுக்கான பதில்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஆய்வறிக்கையை, தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் சாந்தாராம், சென்னையில் வெளியிட்டார்.
இதுகுறித்து, மருத்துவர் உஷா ஸ்ரீராம் கூறியதாவது:
குறிப்பிட்ட, ஆறு நகரங்களில், நீரிழிவு நோய் சிகிச்சைக்கான, "ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும், தலா, 400 நோயாளிகளிடம், கடந்த ஆண்டு, ஜூன் முதல் நவம்பர் வரை, ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட, நீரிழிவு நோயாளிகளில், 12 சதவீதம் பேர் தான், தங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதை, ஆரம்ப நிலையில், பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளனர்.
உணவு கட்டுப்பாட்டால், உடம்பு பலவீனமாக உணர்வதாக, 30 சதவீதம் பேரும், குறைந்த அளவு உணவை உட்கொள்வது சிரமமாக உள்ளது என, 20 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் பேர், தினமும், இரண்டு மணி நேரம் வரை, "டிவி' பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
தினமும், மணக்கணக்கில், "டிவி' பார்ப்பது, உடல் பருமனை கூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, உஷா ஸ்ரீராம் கூறினார்
No comments:
Post a Comment