Wednesday, 15 May 2013

குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு

குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்க புதிய மருந்து கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற வியாதிகள் உடலில் உள்ள நீர்ச்சத்தினை குறைக்கக்கூடிய தன்மை கொண்டவை. அதிலும் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் என்ற நோய்த்தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. இந்த வகை நோய்த்தாக்கத்தினால், இந்தியாவில், ஆண்டிற்கு ஒரு லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள, பாரத் பயோடெக் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், இந்த நோய்த்தொற்றின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை காக்கக்கூடிய சொட்டு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மூன்று வேளையாகக் கொடுக்கக்கூடிய இம்மருந்து, வாந்தி, வயிற்றுப் போக்கினால் ஏற்படக்கூடிய நீர்ச்சத்து குறைபாடினைத் தவிர்க்கின்றது.

இதுபற்றி பயோடெக்னாலஜி துறை செயலாளர் கே.விஜயராகவன் கூறுகையில், “மருத்துவ சோதனையில் இந்த மருந்து பாதுகாப்பான பலன்களைத் தந்துள்ளது. ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றக்கூடிய இம்மருந்து, விஞ்ஞானத்தின் முக்கிய திருப்புமுனையாகும். கொடுக்கப்பட்ட முதல் வருடத்தில், 56 சதவிகிதம் நோய்த் தொற்றினைக் குறைக்கும் இம்மருந்து, அடுத்த வருடம் இந்த நோய் அண்டாமல் பாதுகாக்கவும் செய்கின்றது. மேலும், எந்த வகையான நோய்த்தொற்றாக இருந்தாலும், அதனுடைய தீவிரத்தை இம்மருந்து குறைக்கின்றது” என்றார்.

1985ல் இந்த மருந்து தயாரிப்புக்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கின. அதன்பின்னர், 100 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட இந்த மருந்துக்கு, இந்திய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தால், விரைவில் இது விற்பனைக்கு வரும் தெரிகிறது.

No comments:

Post a Comment