தலாக் கூறி முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிக்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், வழக்குரைஞருமான பதர் சயீத் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பொதுவாக விவாகரத்து போன்ற பிரச்னைகளில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க போதுமான சட்டங்கள் உள்ளன.
ஆனால், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அத்தகைய சட்டபூர்வமான உரிமைகள் இல்லை. மத ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் முஸ்லிம் மத பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாத நிலைமை உள்ளது.
முஸ்லிம் மத தம்பதிகளுக்கு விவாகரத்து அளிக்கும் முன், சட்டப்படி கணவன், மனைவி ஆகிய இரண்டு தரப்பினரிடமும் பேசி, அவர்களின் பிரச்னைக்கு சமரச தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக இரண்டு சமரச தீர்வர்கள் தனித்தனியாக இரு தரப்பிலும் பேசி தீர்வு காண முயல வேண்டும்.
அதில் எவ்வித சமரசத் தீர்வும் கிடைக்காவிட்டால் மட்டுமே திருமண முறிவுக்காகக் கூறப்படும் தலாக் செல்லும்.
நடைமுறையில் இதுபோல நடப்பதில்லை. சில நேரங்களில் மனைவிக்குத் தெரியாமலேயேகூட கணவர் தலாக் கூறி, காஜிக்களிடம் திருமண முறிவுக்கான சான்றிதழ் பெற்று விடுகின்றனர்.
இதனால் முஸ்லிம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.காஜிக்களுக்கு இதுபோன்ற அதிகாரங்கள் ஒரு காலத்தில் இருந்தன. ஆனால், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அந்த அதிகாரங்களை சிவில் நீதிமன்றங்கள் எடுத்துக் கொண்டு விட்டன.
அத்தகைய திருமண முறிவுகளுக்கு சான்றிதழ் அளிக்கும் அதிகாரம் காஜிக்களுக்கு இல்லையென நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று பதர் சயீத் தனது மனுவில் கோரியுள்ளார்.இந்த மனு, தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் தமிழக அரசின் தலைமை காஜி ஆகியோர் இரண்டு வாரத்துக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment