ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் நேற்று இரவு நிகழ்ந்த கலவரத்தில் இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார்களை அடுத்து, இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவிப்பட்டினம் முனீஸ்வரர் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது. இதை ஒட்டி, நேற்று முனீஸ்வரர் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். அப்போது, பால்குடம் எடுத்துச் சென்ற ஊர்வலம், அந்தப் பாதையில் இருந்த பள்ளிவாசலைக் கடந்து சென்றது. அப்போது, பள்ளிவாசல் உள்ளிருந்து வந்த இளைஞர்கள் இருவர், உள்ளே தொழுகை நடக்கிறது. மேளம் அடிக்கக் கூடாது. அனைத்தையும் நிறுத்திவிட்டு பிறகு செல்லுங்கள் என்று கூறினார்கள். ஆனால், உடன் வந்தவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இதே பாதையில் இதே நேரத்தில் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது திடீரென்று இது போல் கூறுவதற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளனர்.அதற்குள் ஊர்வலம் அந்த இடத்தைக் கடந்துவிட்டது.
இந்நிலையில், நேற்று இரவு ஒரு தரப்பு இளைஞர்கள் சிலர் கம்பு கட்டை, கற்களுடன் படையாச்சி காலனிக்குச் சென்று அங்குள்ளோர் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
பதிலுக்கு அந்தக் காலனியின் திரண்ட ஆண்கள் எதிர்த் தரப்பினர் மீது கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காலனியைச் சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்தனர். தாக்க வந்த தரப்பில் 6 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இது மதமோதலாக உருவெடுக்கும் சூழல் ஏற்பட்டதால், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, வன்முறைக் கும்பலைக் கலைத்தனர்.
இதன் பின்னர் இந்த வன்முறைச் சம்பவம் குறித்து இரு தரப்பையும் சேர்ந்த சிலர் போலீஸில் புகார் அளித்தனர். கனகராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில், தேவிப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலீர் ரஹ்மான் என்பவரின் மகன் முகமது அசாருதீன் என்பவர் அளித்த புகாரின் பேரில் காலனியைச் சேர்ந்த தேவா என்பவர் உள்ளிட்ட பெயர் தெரிந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தங்கள் பகுதி அமைதியாக இருந்ததாகவும், தேவிப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் தூண்டுதலின் பேரில் பதட்டத்தையும் கலவரத்தையும் சிலர் தூண்டுவதாகவும் படையாச்சி காலனி பகுதி பெண்கள் திரண்டு சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
No comments:
Post a Comment