கெய்ரோ: எகிப்து கல்லறை தோட்டம் ஒன்றில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியில், அடித்துக் கொலை செய்யப்பட்ட பல குழந்தைகளின் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. குழந்தைகளை கொடூரமாக கொலை செய்ய வேண்டியதன் காரணம் என்ன என்பது குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். எகிப்தில் உள்ள ஏழு பாலைவன சோலைகளில் ஒன்று டாக்லா. புதிய கற்காலத்துக்கு பிறகு (நியோலித்திக் காலம்), இந்த பகுதியில் மனிதர்கள் குடியேறி வாழ ஆரம்பித்துவிட்டனர். மேலும், எகிப்தில் கிறிஸ்தவர்கள் காலூன்றிய பிறகு, இந்த பகுதியில் கல்லறை தோட்டங்கள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன என்று தெரிகிறது. குறிப்பாக கெய்ரோவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கெல்லீஸ்,2 கல்லறை தோட்டத்தில், கிறிஸ்தவர்களின் மரபு முறைப்படி உடல்கள் ஒரே இடத்தில் வரிசையாக புதைக்கப்பட்டிருந்தன. இதனால் தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பகுதியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் வீலர், அவருடன் பணியாற்றும் மற்றொரு ஆய்வாளர் தோஸா டுப்ராஸ்பெகான் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லறை தோட்டம் பகுதியில் மணலை கிளறியபோது அங்கு கிடைத்த எலும்புகள் குழந்தைகளின் எலும்புகளை போல சிறிதாக இருந்தன. அவற்றில் பல இடங்களில் முறிவுகள் ஏற்பட்டிருந்தன. அங்கிருந்த எலும்புகளை ஆய்வு செய்ததில் அவை கி.மு. 50ல் இருந்து கி.பி 450க்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இதுபற்றி வீலர் தீவிர ஆய்வில் இறங்கினார். இந்த ஆய்வுக்கு ‘பரியல் , 519’ என பெயரிடப்பட்டது.
எக்ஸ்ரே, மைக்ராஸ்கோப் மூலமும், ரசாயன மூலக்கூறுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டன. இதுபோல் கிடைத்த குழந்தைகளின் எலும்பு கூடுகளில் மண்டை ஓட்டின் முன்பகுதி (நெற்றிப்பகுதி), விலா எலும்பு, கையின் முன்புறம், இடுப்பு எலும்பு பகுதிகளில் முறிவுகள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக சிதைவடைந்த எலும்புகள் சிறிது வளர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது. இது வீலருக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம், இந்த குழந்தைகள் இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவர் உறுதி செய்தார்.
இதுகுறித்து வீலர் கூறியதாவது: குழந்தைகள் உடல் மிகவும் வளைவு தன்மை உடையது. இவர்களின் எலும்புகள் எளிதில் உடையக்கூடியதல்ல. எனவே, கடுமையாக தாக்கப்பட்டிருந்தால் மட்டுமே இத்தகைய முறிவு ஏற்படும். அதிலும் பெரும்பாலான குழந்தைகளின் கை மேல்பகுதியில்தான் முறிவுகள் அதிகம் உள்ளன. எனவே அவர்கள் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. கெல்லீஸ்,2 கல்லறை தோட்டத்தில் இருந்து 158 குழந்தைகளின் எலும்புகளை தோண்டி எடுத்து ஆய்வு செய்துள்ளோம். பிரான்ஸ், பெரு, லண்டன் பகுதிகளில் இடைக்காலத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இது ரோமானிய கிறிஸ்தவர் காலத்திய கல்லறை தோட்டம். ரோமானியர்கள் குழந்தைகள் மீது அபரிமிதமான அன்பு செலுத்தும் இயல்புடையவர்கள். அவர்களை பூப்போல பாதுகாப்பவர்கள். ஆனால் இந்த அளவுக்கு கொடூரமாக தாக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. தொல்பொருள் ஆய்வில் இது மிகவும் புதுமையான அதிர்ச்சிகரமான தகவல். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு வீலர் கூறினார்.
No comments:
Post a Comment