Saturday, 8 June 2013

மாப்பிள்ளை கறுப்பாக இருந்ததால், அவரை மணக்க மறுத்தார் இளம்பெண்;

ரேபரேலி: உத்தர பிரதேசத்தில், திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் விமரிசையாக நடந்திருந்த நிலையில், மாப்பிள்ளை கறுப்பாக இருந்ததால், அவரை மணக்க மறுத்தார் இளம்பெண்; இதனால், திருமணம் தடைபட்டது.

திருமணம்:


உ.பி., தலைநகர் லக்னோவிலில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள கிராமம், பர்சத் கஞ்ஜ். இந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஹராயியா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகள், பர்சத் கஞ்ஜில் விறுவிறுப்பாக நடைபெற்றன. திருமணம் நிச்சயிப்பதற்கு முன்னதாக, மணமகனை, மணமகள் பார்க்கவில்லை. திருமண நாளான, கடந்த வியாழனன்று காலை, மணமகனின் குடும்பத்தினரும், அவரின் உறவினர்களும், மண்டபத்தில் கூடியிருந்தனர். தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையை, முதல் முறையாக பார்த்தார் மணமகள். பெற்றோர், தனக்கு பார்த்துள்ள மாப்பிள்ளை, மிகக் கறுப்பாக இருப்பதை கண்டதும், அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார். உடன், "என் அழகுக்கு ஏற்ற வகையில் மாப்பிள்ளை இல்லை; அவரை மணக்க முடியாது' என, திடீரென அறிவித்தார். இதனால், மணமகளின் பெற்றோர், மணமகளை சமாதானப்படுத்த முற்பட்டனர்; இருந்தும், அவர் மசியவில்லை.

வெளியேறினார்...:


"கறுப்பாக இருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன்' என, உறுதியாகக் கூறியதோடு, திருமண மண்டபத்தை விட்டும் வெளியேறினார். இதனால், மணமகனின் குடும்பத்தினர் ஆவேசமடைந்தனர். மணப்பெண் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏதாவது விபரீதம் நிகழ்ந்து விடும் என, பயந்த கிராமத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். "மணப்பெண்ணே, திருமணம் செய்ய மறுக்கும் போது, நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது; சண்டை போடாமல், அமைதியாக செல்லுங்கள்' என, மணமகன் வீட்டாருக்கு அறிவுரை கூறினர். திருமணம் நடக்காததால், அதிருப்தி அடைந்த மணமகன் வீட்டாரும், அவரின் உறவினர்களும் அதிருப்தியுடன் வெளியேறினர்.

No comments:

Post a Comment