மதுரை மாவட்டம் உசிலம் பட்டி அருகே உள்ளது வடுகபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி நாகம்மாள். கூலி வேலை செய்து வருகிறார். கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் அருண்குமாருடன் (வயது 12) வசித்து வருகிறார்.
அங்குள்ள பள்ளியில் அருண்குமார் 6-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று தேர்வு முடிவைப் பார்ப்பதற்காக பள்ளிக் கூடத்துக்கு சென்றான். காலில் செருப்பு அணிந்து சென்ற அவனைப் பார்த்து அங்கிருந்த அதே ஊரைச் சேர்ந்த படிவராஜா மகன் நிலமாலை (32) என்பவர், “செருப்பை காலில் போட்டுக் கொண்டு செல்லக்கூடாது. தலையில் சுமந்து செல்ல வேண்டும்” என்று கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவனும் செருப்பை காலில் இருந்து கழற்றி தலையில் வைத்துக் கொண்டு சென்றான். இதைப் பார்த்ததும் பள்ளிக்கூடத்துக்கு வந்த மற்ற மாணவர்கள் அவனை கேலி செய்ததாக கூறப்படுகிறது. பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவம் குறித்து யாருடனும் தெரிவிக்காமல் அருண் குமார் கடந்த 2 நாட்களாக சாப்பிடாமல் சோகத்துடன் இருந்து வந்துள்ளான்.
அவனது நடவடிக்கையில் “திடீர்” மாற்றம் ஏற்பட்டதை பார்த்த அவனது தாயார் நாகம்மாள் விசாரித்தார். அப்போது தான் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளான்.
இதுகுறித்து அவர் உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் அருண்குமாரை தகாத வகையில் பேசி நடத்திய நிலமாலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவன் அருண் குமார் கூறுகையில், “தேர்வு முடிவைப் பார்ப்பதற்காக சென்றிருந்தபோது பள்ளிக் கூடத்தில் இருந்த நிலமாலை என்பவர், செருப்பு அணிந்து வரக்கூடாது என்று அவமானப்படுத்தினார். ஊருக்குள் வருவதே தவறு, அதிலும் செருப்பு அணிந்து வந்து இருக்கிறாய், அதற்கு தண்டனையாக தலையில் செருப்பை சுமந்தபடி நடந்து செல் என்றார். அதன்படி சாவடி வரை செருப்பை சுமந்து சென்றேன். இதனால் மனம் உடைந்தேன்” என்று தெரிவித்தான்.
No comments:
Post a Comment