Monday, 10 June 2013

2வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் காவலர்


சென்னை: சென்னையில், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் காவலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர், சாந்தி, 22. கடந்த, 2011ம் ஆண்டில், காவலர் பணிக்கு தேர்வானார். தற்போது, சென்னை, புதுப்பேட்டையில் உள்ள காவலர் விடுதியில் தங்கியுள்ளார். இதே ஊரை சேர்ந்தவர் கவிதாராணி, 22. இவரும், புதுப்பேட்டையில் காவலர் விடுதியில் தங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன், "ரோல் கால்' பணிக்கு கவிதா ராணி, சென்றார். திரும்பி வர தாமதமானதால், ஆண் காவலர் ஒருவரின் பைக்கில் வந்து, விடுதி வளாகத்தில் இறங்கினார். அப்போது சக பெண் காவலர்கள், கவிதாராணியை கிண்டல் செய்தனர். இதை அவர், பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருப்பினும்,பெண் காவலர்களுக்குள் இது குறித்து, "கிசுகிசு' பரவியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கவிதாராணியை சந்தித்த சாந்தி, பைக்கில் வந்து இறங்கியது குறித்து விசாரித்தார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக, எஸ்.எஸ்.ஐ., சிவாஜியிடம், இருவரும் புகார் தெரிவித்தனர். அவர் இருவரையும் அமைதியாக இருக்கும் படி அறிவுறுத்தியதுடன், "மோதல் குறித்து விசாரிக்கிறேன்' என, கூறியுள்ளார். நேற்று அதிகாலை, கவிதா ராணிக்கும், சாந்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின், கவிதாராணி மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவலர் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து, நேற்று காலை, 6:30 மணிக்கு, சாந்தி கீழே குதித்ததார். தலை மற்றும் இரண்டு கைகளிலும் பலத்த காயம் அடைந்த, சாந்தி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதிக அளவு ரத்தம் வெளியேறி இருந்ததால், இரண்டு பாட்டில் "பி பாசிட்டிவ்' ரத்தம் ஏற்றப்பட்டது. இதுப்பற்றி, சாந்தியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை, எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment