Monday, 10 June 2013

ஒரு பிள்ளை எந்த அளவுக்கு படிக்கிறது என்பதில் மரபணுக்கள் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்


ஒரு பிள்ளை எந்த அளவுக்கு படிக்கிறது என்பதில் அதனது மரபணுக்கள் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
5000 குழந்தைகளை மாதிரியாகக் கொண்டு அவர்களது கல்வித் திறமைக்கும் அவர்களது சமூகப் பின்னணிக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
அதன் பின்னர் அவர்களது மரபணுக்கள் எந்த அளவுக்கு அவர்களது கல்வித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் ஆராய்ந்தார்கள்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, தொழில் ரீதியாக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பிந்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட சிறப்பாக படிக்கிறார்களா என்று ஆராயப்பட்டது.
7,9 மற்றும் 11வது வகுப்புக்களில் நடத்தப்படும் ஒரு திறனறியும் பரீட்சைகளில் குழந்தைகள் பெறும் பெறுபேறுகள் இதற்காக கணிக்கப்பட்டன.
தொழிர்சார் அந்தஸ்தில் உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சராசரியாக 100 க்கு 60 புள்ளிகளை இதற்கான பரீட்சைகளில் பெற, பிந்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் 42 புள்ளிகளைப் பெற்றன. இந்த இரு தரப்புக்கும் இடையிலான வித்தியாசம் 18 புள்ளிகளாகும்.
இந்த 18 புள்ளி வித்தியாசத்தை ஏற்படுத்துவதில் அந்தக் குழந்தைகளின் மரபணுக்கள் எந்த அளவு பங்களிப்பை செய்கின்றன என்று அதன் பின்னர் ஆராயப்பட்டது.
கல்வியறிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்று வகையான மரபணுக்களில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த 18 புள்ளி வித்தியாசத்தை ஏற்படுத்துவதில் மரபணுக்கள் வெறுமனே 2 வீத தாக்கத்தை மாத்திரமே ஏற்படுத்தியதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த விடயத்தில் மரபணுக்களுக்கு முழுமையான, காத்திரமான பங்களிப்பு இருப்பதாக தாம் முன்னைய ஆய்வு முடிவுகளில் இருந்து கருதியதாகவும், ஆனால், தற்போதைய முடிவு அதற்கு முரணாக இருப்பதாகவும் டாக்டர் ஜோண் ஜெரிம் கூறுகிறார்.
முன்னதாக இரட்டையர்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் போது, குழந்தைகளின் கல்வித்திறனில் உள்ள வித்தியாசத்துக்கு 75 வீதமான காரணமாக அவர்களது மரபணுக்கள் திகழ்ந்ததாக கண்டறியப்பட்டது. ஆனால் புதிய ஆய்வு அதற்கு மாறாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்த மரபணுக்கள் ஏற்படுத்துகின்ற வித்தியாசம் மிகவும் குறைவானதாகும். இதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 3 மரபணுக்களில் மாத்திரம் இந்த ஆய்வு செய்யப்பட்டதால் இந்த வித்தியாசம் குறைவானதாக காணப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால், கல்வியறிவு தொடர்பில் மேலும் பல நூற்றுக்கணக்கான மரபணுக்கள் தொடர்புபட்டவையாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
ஆகவே எதிர்கால ஆய்வுகளின்போது மரபணுக்கள் கல்வித்திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன் என்ற கருத்து குறித்து சமூக ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment