புதுடில்லி : பாரதிய ஜனதா மூத்த தலைவர், அத்வானி, 85, நேற்று திடீரென முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகினார். "கட்சி துவக்கப்பட்ட லட்சியத்திலிருந்து பா.ஜ., விலகுகிறது' என, ராஜினாமா கடிதத்தில் அத்வானி குறிப்பிட்டு, அதிருப்தியை வெளிப்படுத்தினார். லோக்சபா தேர்தலுக்கான, பிரசார குழு தலைவராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்ட மறுநாளே, மூத்த தலைவரான அத்வானி தெரிவித்த கருத்துகள், கட்சியில் புயலாக உருவெடுத்து உள்ளது.
அடுத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. கட்சியின் மூத்த தலைவர்களான, அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள், இதில் அடிபட்டன.ஆனால், பா.ஜ.,வில் உள்ள இரண்டாம் மட்ட தலைவர்களிடையே, குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு, பெரும் செல்வாக்கு காணப்பட்டது. சமீபத்தில், குஜராத்தில் நடந்த இடைத் தேர்தல்களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, "மோடியை, பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்' என்ற, கோஷம் வலுத்தது.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், கோவாவில், சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தை, பா.ஜ., மூத்த தலைவரான, அத்வானி புறக்கணித்தார். "உடல் நலக் குறைவு காரணமாக, பங்கேற்கவில்லை' என, அவர் கூறினாலும், நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் காரணத்தால் தான், இந்த கூட்டத்தை அவர் புறக்கணித்ததாக, தகவல் வெளியானது.
இந்த கூட்டத்தில், அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக, நரேந்திர மோடி பதவி உயர்த்தப்பட்டார். பா.ஜ., தொண்டர்கள், இரண்டாம் மட்ட நிர்வாகிகள், இதை வரவேற்றாலும், அத்வானி உள்ளிட்ட, மூத்த தலைவர்கள், கடும் அதிருப்தி அடைந்தனர். டில்லியில் அத்வானி வீட்டின் முன், மோடி ஆதரவாளர்கள் எதிர்ப்பு கோஷம்போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை, மோடியின் பதவி உயர்வை முழு மனதுடன் ஆதரித்தன.கட்சியை வளர்த்தவரும், இதுவரை வழிகாட்டியாக இருந்தவருமான, அத்வானி புறக்கணிக்கப்படுகிறார் என்ற கருத்து எழுந்தது. இதனால், "பா.ஜ.,வில், அடுத்து என்ன நடக்கப் போகிறது' என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங்கிற்கு, அத்வானி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
அதில், அத்வானி எழுதியிருந்ததாவது:ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபத்யாயா, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் போன்ற தலைவர்கள், பா.ஜ.,வின் முன்னோடியான, ஜன சங்கத்தை, எந்த நோக்கத்துக்காக தோற்றுவித்தனரோ, அந்த கொள்கைகளுடன், கட்சி, தற்போது செயல்படவில்லை என, கருதுகிறேன்.அந்த மூத்த தலைவர்கள் சுட்டிக் காட்டிய திசையிலிருந்து, கட்சி, திசை மாறி செல்கிறது. அதை ஏற்றுக் கொள்ளும் சுபாவம் எனக்கு இல்லை. தற்போது கட்சியில் உள்ள தலைவர்களுடன், அவர்கள் பின் பற்றும் கொள்கைகளுடன், இணங்கி செயல்படுவது, மிகவும் சிரமமாக உள்ளது. கட்சியின்பெரும்பாலான தலைவர்கள், தங்கள் சுயநல அக்கறையுடன் செயல்படுகின்றனர்.ஒட்டு மொத்த வாழ்க்கையையும், ஜன சங்கத்துக்காகவும், பா.ஜ.,வுக்காகவும், அர்ப்பணித்த திருப்தி எனக்கு உள்ளது. அதில் பெருமைப்படுகிறேன். கட்சி, எந்த நோக்கத்துக்காக துவக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துடன் செயல்படவில்லை என்பதால், தற்போது, கட்சியில் நான் வகிக்கும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன்.குறிப்பாக, தேசிய செயற்குழு, பார்லிமென்ட் போர்டு, கட்சியின் தேர்தல் குழு ஆகியவற்றில், உறுப்பினராக உள்ளேன். இந்த பதவிகளை ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு, அந்த கடிதத்தில், அத்வானி எழுதியிருந்தார்.
ராஜ்நாத் சிங்கிற்கு, இந்த கடிதம் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, டில்லியில் உள்ள மீடியாக்களுக்கும், இந்த தகவல் வெளியானது. இதனால், டில்லியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "அத்வானியின் ராஜினாமாவை ஏற்க போவது இல்லை' என, பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் தெரிவித்தாலும், அத்வானி, தன் முடிவில் உறுதியாக இருப்பதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்வானி எய்துள்ள, இந்த அதிரடி அஸ்திரத்தால், பா.ஜ.,வுக்குள், உச்சக்கட்ட குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.அத்வானியிடம் சமரசம் பேச, சுஷ்மா சுவராஜ் உட்பட சிலர் முயற்சித்த போதும், அவர் முடிவை மாற்றவில்லை. அத்வானியைத் தொடர்ந்து அவர் கருத்தை ஆதரிக்கும் மற்றவர்கள் ராஜினாமா செய்து, கட்சிக்கு இக்கட்டான நிலை ஏற்படுத்தக் கூடாது என்பதால், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், முக்கிய தலைவர்களுடன் ஆலோசனைகளையும் மேற்கொண்டார்.
இதற்கிடையே, அத்வானியுடன், மோடி நேற்று காலையில் தொலைபேசி மூலம் பேச முயற்சித்ததாகவும் அதற்கு அத்வானி பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அத்வானியை சமரசம் செய்ய, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. ஏனெனில் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை விட, அக்கொள்கையில் ஊறியவர் அத்வானி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
No comments:
Post a Comment