Thursday, 6 June 2013

தர்மபுரி மாவட்டத்தில், கலவரத்துக்கு காரனமான காதல் உடைந்தது


சென்னை: தர்மபுரி மாவட்டத்தில், கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண், ஐகோர்ட்டில் நேற்று ஆஜரானார். தாயுடன் தங்கியிருக்க அவர் விருப்பம் தெரிவித்ததால், ஐகோர்ட் அனுமதியளித்தது. இதையடுத்து, இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த பெண்ணுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து பெண்ணின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், பெண்ணின் தாய் தேன்மொழி தாக்கல் செய்த மனு: என் மகள் திவ்யாவை கடத்திச் சென்று, 21 வயது நிரம்பாத இளவரசன் என்பவருடன், சட்ட விரோதமாக திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து, என் கணவர் போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை; நானும் புகார் அளித்தேன். இந்தச் சம்பவத்தால், கடந்த ஆண்டு நவம்பரில், என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். என் மகளை, வலுக்கட்டாயமாக, சட்ட விரோத காவலில் வைத்துள்ளனர். அவர் எங்கு இருக்கிறார் என, தெரியவில்லை. என் மகளை கண்டுபிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, கடந்த மார்ச் மாதம், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் முன், திவ்யா ஆஜரானார். அவரிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். "தன்னை யாரும் துன்புறுத்தவில்லை; மிரட்டவில்லை' என, திவ்யா தெரிவித்தார். இதையடுத்து இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் முன், திவ்யா ஆஜரானார். அவரது தாய் தேன்மொழியும் ஆஜரானார். திவ்யாவிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். தேன்மொழி சார்பில், வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ், இளவரசன் சார்பில், வழக்கறிஞர் சங்கரசுப்பு, போலீஸ் தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை ஆஜராகினர்இதையடுத்து, நீதிபதிகள் ஜெய்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: நாங்கள் திவ்யாவிடம் விசாரித்த போது, "நடந்த சம்பவங்களினால், மன குழப்பத்தில் இருக்கிறேன்; தகுந்த முடிவு எடுக்கும் வரை, தாயுடன் தங்கியிருக்க விரும்புகிறேன்' என, கூறினார். தற்போது, இளவரசன் உடன் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என, தகவல் வந்ததால், சொந்த விருப்பத்தின் பேரில், அவரை சந்திக்க சென்றதாக கூறினார். எனவே, திவ்யா தெரிவித்த தகவலின்படி, அவர் தன் தாயுடன் தங்கியிருக்கலாம். போலீஸ் பாதுகாப்பு கோருவது, திவ்யா, இளவரசனைப் பொருத்தது. அவ்வாறு கோரினால், அதை போலீசார் பரிசீலித்து, போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை, ஜூலை, 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment