Monday, 10 June 2013

ஜெர்மனியில் வெள்ளப் பெருக்கு:


ஜெர்மனியில் எல்பே நதியில் வெள்ளப் பெருக்கால் அணை உடைந்ததைத் தொடர்ந்து, அருகில் வசித்து வந்த சுமார் 23 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி நாட்டின் சேக்சனி அன்ஹால்ட் மாகாணத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கன மழை காரணமாக எல்பே நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளம் ஓடுவதால் அந்த மாகாணத்தின் தலைநகர் மக்டேபர்கில் நிலைமை மோசமடைந்துள்ளது. மாகாணத்தின் மற்ற பகுதிகளும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், எல்பே நதி தனது துணை நதியான சாலேயுடன் சந்திக்கும் இடத்தில் உள்ள ஓர் அணை ஞாயிற்றுக்கிழமை திடீரென்று உடைந்தது. இதனால் அணையில் இருந்த நீர் வெளியேறி அருகில் உள்ள கிராமங்களும், அகேன் என்ற நகரமும் வெள்ளக்காடாகி விட்டன. அங்கிருந்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ராணுவ ஹெலிகாப்டர்களையும், படகுகளையும் மீட்புப்படையினர் பயன்படுத்தினர்.
இதனிடையே, மக்டேபர்க் நகரைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 23 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த நகரைச் சுற்றிலும் வெள்ளத் தடுப்புக்காக தற்காலிக சுவரை அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புப்படை ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள மின் நிலையத்துக்குள் வெள்ள நீர் புகாமல் அரண் அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, நாட்டின் கிழக்குப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களை ஜெர்மன் அதிபர் ஜோச்சிம் கௌக் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

No comments:

Post a Comment