Thursday, 6 June 2013
காதலியுடன் பேஸ்புக் மூலம் நட்பை ஏற்படுத்திக் கொண்டதால் கொலை செய்த நன்பன்
ஓசூர் : ஓசூரில் இன்ஜினியரிங் மாணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உடன் படிக்கும் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அம்பத்தூர் ராம்நகர் திருமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ராகவ் (22). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ. ஆர்க்கிடெக் படித்து வந்தார். இதற்காக ஓசூர் காமராஜர் காலனி 3வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டின் மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார். 3 ஆண்டு படிப்பு முடிந்த நிலையில், அறையை காலி செய்து விட்டு சென்னை செல்வதற்காக ஆயத்தமான மாணவர் ராகவ், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை பிடிக்க ஓசூர் டிஎஸ்பி கோபி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவிட்டார். விசாரணையில், அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் பிரவீன்குமார், முதலாம் ஆண்டு மாணவர் பிரணவ் சச்சின் ஆகியோர் ராகவை கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
கொலையான ராகவ், பிரவீன்குமார், பிரணவ் சச்சின் ஆகிய 3 பேரும் நண்பர்கள். பிரவீன்குமார் ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்தவர். பிரணவ் சச்சின் கோவை பட்டகாரனூரைச் சேர்ந்தவர். பிரவீன்குமாரின் காதலியுடன் ராகவ் பேஸ்புக் மூலம் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், தனது நண்பர் பிரணவ் சச்சின் உதவியுடன் ராகவை தீர்த்துக் கட்ட திட்டமிட்டுள்ளார். கடந்த 5ம் தேதி இரவு அவர்கள் ராகவ் அறைக்கு வந்துள்ளனர். அங்கு ‘‘சூது கவ்வு’’ பட டிவிடியை லேப் டாப்பில் போட்டு பார்த்துள்ளனர். அதிகாலையில் ராகவிடம் தகராறு செய்து, அவரை கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். தடயங்களை மறைக்க அறை முழுவதும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். மேலும், ரத்தக் கறையை அங்குள்ள தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
சினிமா பாணியில் தடயம் அழிப்பு
‘கில்லி’ திரைப்படத்தில் கதாநாயகியை மோப்ப நாய் பிடிக்காமல் இருக்க, கதாநாயகன் மிளகாய் பொடியை தூவுவது போல் ஒரு காட்சி வரும். அதனை பார்த்து மிளகாய் பொடி டெக்னிக்கை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment