Thursday, 6 June 2013

பாலியல் தொந்தரவுகளை தடுக்க குட்டை பாவாடை, இறுக்கமான உடைகள், அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு -சீன போலீசார் எச்சரிக்கை




பீஜிங் : பாலியல் தொந்தரவுகளை தடுக்க குட்டை பாவாடை, உடல் அமைப்பை வெளிப்படுத்தும் இறுக்கமான உடைகள், பனியன்களை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு சீன போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீன தலைநகர் பீஜிங்கில், பஸ்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் குவிய ஆரம்பித்துள்ளன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டும் புகார்கள் குறைவதாக இல்லை.

இதனால் போலீசார் இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகாமல் இருக்க, குட்டை பாவாடை, உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் லெக்கீஸ் பேன்ட், மார்பு தெரியும் பனியன்கள் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது, பின்பக்கம் உள்ள மேடான பகுதிகளில் சென்று அமராமல் (தமிழகத்தில் ஏசி பஸ்களில் இருப்பதுபோன்ற அமைப்பு), முன்புறம் உள்ள கீழ்பகுதியில்தான் அமர வேண்டும். இதேபோல், மாடி பஸ்களின் உள்படியில் நிற்பதை தவிர்த்தால், செல்போன்களில் கீழே இருப்பவர்கள் புகைப்படம் எடுப்பதை தடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதை நோட்டீசாக அடித்து பேருந்துகளிலும், பொது இடங்களிலும் ஒட்டியுள்ளனர். பேருந்துகளில் கண்டக்டர்கள் மூலம் இந்த அறிவுரைகளை கூறவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இதற்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த லின் லிஷியா கூறுகையில், ‘’அறிவுரை கூறுவது மிக எளிது. பேருந்துகளில் செல்வதற்காக மக்கள் கட்டணம் செலுத்துகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், பெண்களுக்கு உகந்த பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவது போக்குவரத்து துறையினரின் கடமை’’ என்றார்.

No comments:

Post a Comment