வாஷிங்டன்:""அமெரிக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட் வசதி, இலவசமாக வழங்கப்படும்,'' என, அதிபர், ஒபாமா தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளிடையே, கல்விப்புரட்சி அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள், அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட, பல நாடுகளை சேர்ந்த மாணவர்களும், உலக அளவில் சாதனை படைத்து வரும் நிலையில், அமெரிக்க மாணவர்களின் செயல்பாடுகள் மிகவும் பின் தங்கியுள்ளதாக, பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த செய்தி, அமெரிக்க அதிபர், ஒபாமாவை கவலையடைய செய்துள்ளது.
இதுகுறித்து, ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உலக நாடுகளை சேர்ந்த மாணவர்களுடன், அமெரிக்க மாணவர்கள் போட்டியிட்டு சாதனை படைக்கவும், அனைத்து தகவல்களையும், உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக, நாட்டின், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், அதிவேக இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும், இதை மாணவர்கள், இலவசமாக பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின், 99 சதவீத மாணவர்கள், இந்த சேவையை இலவசமாக பெற முடியும். தென் கொரியா போன்ற சிறிய நாடுகள், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறியுள்ள நிலையில், அமெரிக்காவின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றன. குறுகிய காலத்தில், மாணவர்கள் உலகளாவிய அறிவை பெறுவதின் மூலம், நாட்டின் கல்வி துறையில், புதிய புரட்சியை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment