மும்பை மாநிலத்தில் பூட்டப்பட்ட காருக்குள் 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தானே பகுதியில் குடியிருப்புக்கு அருகில் உள்ள திறந்த வெளி இடத்தில் கார்கள் நிறுத்துமிடம் உள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்ட கார்களை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு முன்பு நிறுத்திவைக்க இந்த இடம் பயன் படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில்,இந்த கார் பார்கிங் இடத்திற்கு திலீப் அமர் மாஜி (வயது 7), ரூபி அமர் மாஜி (வயது 5), ராஜ் வினோத்சிங் சோனி (வயது 6) ஆகிய குழந்தைகள் விளையாடச் சென்றனர். விளையாடிக்கொண்டிருக்கும்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் நுழைந்த குழந்தைகள், காரின் சென்ட்ரல் லாக்கிங் அமைப்பு காரை பூட்டியதால் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
காரின் ஜன்னல்களும் மூடப்படிருந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 குழந்தைகளும் காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெகுநேரமாகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால், அவர்களின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் இரவு முழுவதும் அப்பகுதியில் குழந்தைகளைத் தீவிரமாக தேடினர். அதிகாலையில் கார் பார்க்கிங் பகுதியில் தேடியபோது, காருக்குள் 3 குழந்தைகளும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் உயிரிழந்த திலீப் அமர் மாஜி (வயது 7), ரூபி அமர் மாஜி (வயது 5) ஆகிய இரு குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment