புதுடெல்லி : சட்டவிதிகளை மீறி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் சிறுவர்கள் சேர்வது எப்படி என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் ஆலோசகர் கோவிந்தாச்சார்யா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
இந்திய சட்டங்களின்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் சேரமுடியாது. ஆனால், சட்டவிதிகளை மீறி ஏராளமான மைனர்கள் இந்த இணையதளங்களில் பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் 8 கோடி கணக்குகள் போலியானவை என்றும் அதன் உண்மையான உரிமையாளர் யாரென்றே தெரியவில்லை என்று பேஸ்புக் இணையதளமே தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது.
இந்தியாவை சேர்ந்த 50 கோடி பேர் பேஸ்புக் இணையதளத்தில் உள்ளனர். அவர்களை பற்றிய விவரங்கள் அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டர் சர்வர்களில் உள்ளது. மேலும், இந்தியா மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு இந்த இணையதளங்கள் வரி செலுத்துவதே இல்லை. அதை வசூலிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது பதிவு செய்துள்ள இந்தியர்களின் விவரங்களை சரிபார்க்கவும், வருங்காலத்தில் 19 வயதுக்குக்குட்பட்ட மைனர்களை சேர்க்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க இரு இணையதளங்களுக்கும் உத்தரவிட வேண்டும். மேலும், சைபர் குற்றங்களை தடுக்க அரசு அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் சமூக இணையதளங்களை பார்க்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோவிந்தாச்சார்யா கூறியுள்ளார். இதை நீதிபதிகள் பி.டி.அகமது, விபுபக்ரூ ஆகியோர் பெஞ்ச் நேற்று விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் சமூக இணையதளங்களில் சேர எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து 10 நாளில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வருமானத்துக்கு வரி செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும்படி பேஸ்புக், கூகுள் ஆகிய இணைய தளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment