Saturday, 27 April 2013

மிரட்டிய சாமியார் வெட்டி கொலை:


சென்னை: சித்ரா பவுர்ணமி அன்று, காவு வாங்க போவதாக மிரட்டிய சாமியார், நேற்று, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளிகள் ஐந்து பேர் சரணடைந்தனர்.

சூளை, சென்ன கேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர், ஜானகிராமன், 44. இவருக்கு, இந்திரா என்ற மனைவியும், 15 மற்றும் 13 வயதில் மகன்களும் உள்ளனர். இருவரும், பள்ளியில் படிக்கின்றனர்.

சரமாரி வெட்டு: ஜானகிராமன், அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் மற்றும் வீட்டின் முன்புறம் உள்ள பவானி அம்மன் கோவில்களில், கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, சாமியாடி குறி சொல்லி வந்தார். இவருக்கு, ஸ்ரீபாச்சி சுவாமிகள் என்ற பெயரும் உண்டு. இவர், நேற்று காலை, 6:30 மணிக்கு, பால் வாங்குவதற்காக, அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த ஐந்து பேர், ஜானகிராமனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை கைப்பற்றிய வேப்பேரி போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக, சூளையை சேர்ந்த அப்பு (எ) சுதாகர், வீரா, சாரதி, கோபால், சுரேஷ் ஆகிய ஐந்து பேர், சைதாப்பேட்டை 18வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை, மே 3ம் தேதி வரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் ஆனந்தவேலு உத்தரவிட்டார். அதன்படி, ஐந்து பேரும், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலைக்கு காரணம் என்ன: குறி சொல்வதுடன், பில்லி, சூனியம் போன்ற மாந்திரிக வேலைகளில், ஜானகிராமன் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், சூளை பகுதியில், அவர் பெயர் பிரபலமானதுடன், பணமும் நன்றாக புரள ஆரம்பித்தது. அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல், பணம் கேட்டு ஜானகிராமனை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளது. ஆனால், ஜானகிராமன் பணம் கொடுக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த கும்பல், அவரை கொலை செய்திருக்கலாம் அல்லது பெண் தொடர்பு எதுவும் காரணமாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர். இந்த நிலையில், பூஜை செய்கிறேன் என்ற பெயரில், இரவு நேரங்களில் உடுக்கை அடித்து, ஜானகிராமன் தொந்தரவு செய்து வந்ததால், அவரது வீட்டின் பின்புறம் வசிக்கும் சாரதி என்பவருக்கும், அவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. சாரதியின் உறவினர்கள் சிலர், தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு, ஜானகிராமனின் மாந்திரீக வேலை தான் காரணம் என, சாரதி வீட்டார் நினைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஜானகிராமன், ""சித்ரா பவுர்ணமி அன்று, ஒரு காவு வாங்குவேன்,'' என, கூறி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சாரதி உட்பட ஐந்து பேர், ஜானகிராமனை தீர்த்து கட்டியுள்ளது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

No comments:

Post a Comment