Sunday, 28 April 2013

காவிரி ஆற்றில் மூழ்கி தாய்-மகள் உள்பட 4 பேர் சாவு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தாய்-மகள் உள்பட 4 பேர் சாவு
திருச்சி மாவட்டம் பெருகமணி அருகே உள்ளது நங்கவரம் கிராமம். இங்குள்ள சவாரிமேடு பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. தற்போது அங்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இந்தநிலையில் இன்று காலை தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் பெருகமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துவிட்டு குடங்களில் தீர்த்தம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சசிகுமார் மனைவி உமாதேவி (வயது 35), அவரது மகள் தீபா (13), உறவினரான சந்துரு மகன் ஜீவானந்தம் (7), திருநாவுக்கரசு மகள் பிரவீணா (22) உள்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற போராடினர்.

ஆனால் அதற்குள் 5 பேரும் புதை மணலில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களை மீட்டு முதலில் பெருகமணி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை. இதையடுத்து அவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உமாதேவி, தீபா, ஜீவானந்தம், பிரவீணா ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment