Monday, 22 April 2013
பாஸ்டன் குண்டுவெடிப்பு: முதல் குற்றவாளி சாவில் திடீர் திருப்பம்
பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளியை அவனது தம்பியாகிய இரண்டாவது குற்றவாளியே காரை ஏற்றிக் கொன்ற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியின்போது இறுதிக் கோட்டின் அருகே சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இந்த தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சுமார் 20 பேர்களின் கை, கால் போன்ற சிதைந்த உறுப்புகளை அகற்றிய பின்னரே அவர்களை உயிருடன் காப்பாற்ற முடிந்தது.
சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது கருப்பு நிற தொப்பி மற்றும் வெள்றை நிற தொப்பி அணிந்த 2 வாலிபர்கள் கருப்பு பையினுள் குக்கர் வெடிகுண்டுகளை வைத்துச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களின் புகைப்படங்களை வெளியிட்ட போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில், மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒளிந்துக்கொண்ட குற்றவாளிகள் இருவரும், அங்கு காவலுக்கு இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றனர்.
இதையறிந்த போலீஸ் படையினர் அப்பகுதியை முற்றுகையிட்டு பதுங்கியிருந்த குற்றவாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் முதல் குற்றவாளி என கருதப்பட்ட கருப்பு தொப்பி ஆசாமி தமேர்லன் (26) என்பவன் குண்டு பாய்ந்து பலியானதாக கருதப்பட்டது.
2வது குற்றவாளியான டுசோகர் (19) என்பவன் அங்கிருந்த கருப்பு நிற காரை எடுத்துக்கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தப்பியோட முயன்றான். பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற போலீசார், வாட்டர் டவுன் பகுதியில் உள்ள படகு குழாம் அருகே அவனை சுற்றி வளைத்தனர்.
அங்கிருந்த ஒரு பழுதான படகிற்குள் தார்பாய் போட்டு தன்னை மறைத்துக்கொண்டு டுசோகர் மறைந்திருந்ததை போலீசார் ஹெலிகாப்டரில் இருந்த கேமராக்கள் கண்டுபிடித்தன.
உடனடியாக ஒரு 'ரோபோட்'டை வரவழைத்து, படகின் மீதிருந்த தார்பாயை விலக்கிய போலீசார், படகின் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த டுசோகரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவனுக்கு தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்ததால் வாக்குமூலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் குற்றவாளியான தமேர்லன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சாகவில்லை. அவனது தம்பி காரில் தப்பிச் சென்றபோது கார் மோதியதில்தான் அவன் உயிரிழந்தான் என போலீசார் தற்போது கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, வாட்டர் டவுன் போலீஸ் உயரதிகாரி டேவியாவு இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
குற்றவாளிகள் இருவரும் திருடப்பட்ட கார்களில் தப்பிச் செல்வதை அறிந்து அவர்களை விரட்டிச் சென்றோம். ஓர் இடத்தில் கார்களை விட்டு இறங்கிய அவர்கள் இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். சுமார் 300 குண்டுகள் வரை இருந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது. திடீரென அவர்கள் எங்களை நோக்கி குக்கர் வெடிகுண்டை வீசினார்கள்.
திடீரென்று தமேர்லன் கையிலிருந்த துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்துப் போனதால் அவன் திகைத்து நின்றான். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவனுக்கு கைவிலங்கு போட நாங்கள் முயன்றோம்.
அப்போது, டுசோகர் காரில் ஏறி அதிகவேகத்துடன் காரை ஓட்டியபடி எங்கள் மீது மோத வந்தான். போலீசார் அனைவரும் திசைக்கு ஒருவராக சிதறி ஓடினோம்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தமேர்லன் மீது கார் ஏறி, இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவன் ரத்த வெள்ளத்தில் பலியானான்.
சற்று தூரம் சென்றதும் காரை விட்டு இறங்கி ஓடிய டுசோகரை படகு குழாமில் முற்றுகையிட்டோம். பின்னர் நாங்கள் கைது செய்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த புதிய தகவல் அமெரிக்க மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது குற்றவாளி போலீசாரின் கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment