Monday, 22 April 2013

பர்மா: முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை பொலிஸார் வேடிக்கை பார்த்தனரா?

வன்முறைக் கும்பல் வீடுகளுக்கு தீவைப்பதையும் வீடியோ காட்டுகிறது. 

பர்மாவின் மெய்க்டீலா நகரில் பௌத்த வன்முறைக் கும்பல் சிறுபான்மை முஸ்லிம்களைத் தாக்குவதை பொலிஸ் அதிகாரிகள் உடனிருந்து வேடிக்கை பார்ப்பது போன்ற பொலிஸ் வீடியோக்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன.
முஸ்லிம் உரிமையாளரைக் கொண்ட நகைக்கடை ஒன்றை ஆத்திரம் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி அழிப்பதையும் வீடுகளுக்கு தீ வைப்பதையும் இந்த வீடியோவில் காண முடிகிறது.
ஒருவரது உடல் தீப்பிடித்து எரிவதும் இந்த வீடியோவில் வருகிறது. அவர் முஸ்லிம் என்று கருதப்படுகிறது.

அரங்கேற்ற ஆவணம்

மண்டலே பகுதியில் உள்ள மெய்க்டீலா நகரில் எவ்விதமாக வன்முறை அரங்கேறியது என்பதை முழுமையாக விளக்குவதாகவும், தடையங்களைக் காண்பிப்பதாகவும் பிபிசிக்கு கிடைத்துள்ள வீடியோ அமைந்துள்ளது.
அதிலே ஒரு காட்சியில், உடலில் தீவைக்கப்பட்ட ஒரு ஆள் தரையில் புரள அதனை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தினர், "தண்ணீரெல்லாம் எடுத்துவர வேண்டாம் அவன் அப்படியே சாகட்டும்" என்று கூறுகின்றனர்.
இன்னொரு காட்சியில் தப்பித்து ஓட முயலும் ஒரு இளைஞனைப் பிடித்து ஒரு கும்பல் தாக்குகிறது. புத்த பிக்கு ஒருவரும் அவரை அடிக்கிறார்.
இந்த வீடியோக்களில் பெரும்பகுதியை பர்மீய பொலிசாரே படம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற மாதம் எடுக்கப்பட்ட வீடியோ இது.
அச்சமயம் மெய்க்டீலாவில் நடந்த வன்முறைகளில் குறைந்தபட்சம் 43 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

பொருளாதார தடை விலக்கல்?

பர்மாவில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் சீர்திருத்தங்களுக்காக அந்நாட்டின் மீது தாம் விதித்திருந்த தண்டனைத் தடைகளை விலக்கிக்கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு ஒன்றை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஒரு வருட காலமாக தண்டனைத் தடைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பர்மாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் பற்றி கவலைகள் எழுந்திருந்தாலும் தண்டனைத் தடைகளை நிரந்தரமாக விலக்கிக்கொள்வது என்றே ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுக்கும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment