சென்னை : சோழிங்கநல்லூர் நியூகுமரன் நகர் 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தேவன். இவரது மனைவி வான்மதி (40). நேற்று முன்தினம் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரைக்கு சென்றுவிட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். ஈஞ்சம்பாக்கம் அருகே வந்தபோது பைக் டயர் பஞ்சர் ஆனது. இருவரும் பைக்கை தள்ளியபடி நடந்து சென்றனர். அப்போது பைக் கில் வந்த 2 பேர் வான்மதி அணிந்தி ருந்த செயினை பறித்து தப்பினர்.
வாலிபர்கள் வந்த பைக்கின் நம்பர் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வான்மதி தகவல் தெரிவித்தார். வெட்டுவாங்கேணியில் உள்ள விடுதியில் அந்த பைக் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற நீலாங்கரை போலீசார், விடுதியில் இருந்த அப்துல் காதர் (20), யூசுப் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் வான்மதியிடம் செயின் பறித்ததும் தெரிந்தது. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மதுரவாயலை சேர்ந்த பிரிட்டோ லாரன்ஸ் (20) என்பவரையும் கைது செய்தனர். இவரும் அதே கல்லூரியில் படிக்கிறார். மேலும் யூசுப், அப்துல் காதர் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுடன் சமீபத்தில்தான் பிரிட்டோ லாரன்ஸ் இணைந்துள்ளார். 3 பேரும் பல இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
வளசரவாக்கம், விருகம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, சோழிங்கநல்லூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பல பகுதியில் வழிப்பறி செய்துள்ளனர். வழிப்பறி செய்த நகைகளை விற்று, அந்த பணத்தில் ஈசிஆரில் உள்ள கேளிக்கை விடுதி, மசாஜ் கிளப்புக்கு சென்று ஆடம்பர செலவு செய்துள்ளனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 100 சவரனுக்கு மேல் வழிப்பறி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.10,000, 4 சவரன் நகை, 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துக்கின்றனர்.
No comments:
Post a Comment