Saturday, 27 April 2013

வலிப்பு நோய் உள்ளவர்கள் வாகனம் ஓட்டலாமா?


மதுரை: "வலிப்பு நோய் உள்ளவர்கள், வாகனம் ஓட்டுவதால் பிறரின் உயிருக்கு ஆபத்து; இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு "டிரைவிங் லைசென்ஸ்' தரக்கூடாது' என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கம்பத்தை சேர்ந்த சிலர் வேனில் மதுரை வந்தனர். உசிலம்
பட்டிக்கு அருகே வந்தபோது டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டு, புளிய மரத்தில் வேன் மோதியது. இதில், 11 பேர் காயமடைந்தனர். அந்த டிரைவருக்கு வலிப்பு நோய் உள்ளதால், அவருக்கும், பயணிகளுக்கும், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து நேரிடும் வாய்ப்பு உள்ளதால், அவரது "லைசென்சை' நிரந்தரமாக ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீஸ் பரிந்துரை செய்தது.

இதேபோல், நேற்றும் ஒரு சம்பவம் மதுரை காளவாசலில் நடந்தது. நடராஜ் நகரைச் சேர்ந்த சின்னமாயன் என்பவர், நேற்று காலை ஜீப் ஓட்டி வந்தார். காளவாசல் சிக்னல் அருகே வந்தபோது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால், ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள துணிக்கடைக்குள் புகுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வலிப்பு நோய் உள்ளவர்கள், வாகனம் ஓட்டலாமா; அவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற தகுதி உடையவர்களா என்பது குறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ""டாக்டர் சான்று அளித்தால் மட்டுமே, "லைசென்ஸ்' வழங்குகிறோம். சில டாக்டர்கள் "கண்ணை' மூடிக்கொண்டு கையெழுத்திட்டு சான்று தருவதால், வேறு வழியின்றி தரவேண்டியுள்ளது,'' என்றனர்.

வலிப்பு நோய், மூளை தொடர்பு உடையது. இது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து, மூளை நரம்பியல் டாக்டர் மனோகரன் கூறியதாவது: மூளையில் ஏற்படும் தழும்பு, கிருமி தாக்குதல், கட்டி உருவாகுதல், ரத்தக்கசிவு போன்ற காரணங்களால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. சிலருக்கு பிறவிலேயே இப்பாதிப்பு இருக்கும். தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து வரவேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, பரிசோதனை செய்ய வேண்டும். ஆனாலும், எப்போது வலிப்பு ஏற்படும் எனத் தெரியாது. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பதால், இப்பாதிப்பு உள்ளவர்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு கண் பார்வை, காதின் கேட்கும் திறன் நன்றாக உள்ளதா என ஆய்வு செய்த பிறகு, "டிரைவிங் லைசென்ஸ்' தரலாம் என போக்குவரத்து விதி கூறுகிறது. வலிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், பெரும்பாலும் நாங்கள் "டிரைவிங் லைசென்ஸ்' வழங்க பரிந்துரைப்பதில்லை, என்றார்.

No comments:

Post a Comment