Thursday, 25 April 2013

பாலியல் பலாத்காரத்திற்கு அடிப்படை காரணம் என்ன? கண்டறிய ஐகோர்ட் உத்தரவு



புதுடில்லி: "டில்லியில், பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதற்கு, அடிப்படையான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்' என, மத்திய அரசுக்கும், டில்லி மாநகர போலீசுக்கும், அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகரிக்கும் கொடூரம்: டில்லியில், பாலியல் பலாத் கார சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்களை தடுக்கக் கோரி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி, டி.முருகேசன் தலைமையிலான, "பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

டில்லியில் நடந்த, சமீபத்திய சம்பவங்களைக் குறிப்பிட்டு, அதிர்ச்சியுடன் நீதிபதி கூறியதாவது: டில்லியில், பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதற்கான, அடிப்படை காரணத்தை, தீவிரமாக ஆராய்ந்து, அதற்கான, ஆணி வேரை கண்டுபிடிக்க வேண்டும். டில்லியில் எங்கோ, எதிலோ தவறு நடக்கிறது; மக்கள் முட்டாளாகி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகமும், டில்லி போலீசும், பாலியல் பலாத்கார சம்பவங்கள், அதிகரிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். டில்லியில் நடக்கும், இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருப்பவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து, இங்கு வந்து தங்கியிருப்பவர்களே. எனவே அவர்கள், இது போன்ற தவறுகளில் ஈடுபடாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். டில்லியில் நடப்பதை பார்த்து, ஒவ்வொருவரும், மிகவும் கவலை அடைந்துஉள்ளனர். ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள். இது போன்ற கொடுமைகளை, தடுத்து நிறுத்துவதற்கு வழி என்ன என்பதை, பார்க்க வேண்டும்.

போலீசுக்கு பயிற்சி: குற்றம் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து, போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளித்து, இது போன்ற குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் பலாத்கார சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, டில்லியில் மருத்துவமனைகளில், உடனடியாக சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய விபரத்தை அளிக்கும்படி, ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. அதுபற்றிய விபரத்தை, டில்லி மாநில அரசின் சுகாதாரத் துறையும், டில்லி மாநகர போலீசாரும் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment