ராமநாதபுரம் : ராமநாதபுரம் கோட்டத்தில் ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பாதி வழியில் நிற்கும் பஸ்களால், பயணிகள் பரிதவிப்பது தொடர்கிறது.
ராமநாதபுரம் நகர், புறநகர், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட ஆறு கிளைகள் மூலம் 230க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலுடன் காணப்படுகிறது.
கிழிந்த சீட்டுகள், சேதமடைந்த ஜன்னல், "வழுக்கை' டயர்கள், மழை பெய்தால் ஒழுகும் மேற்கூரை போன்ற குறைபாடுகளுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி உழைத்து ஓய்வெடுக்கும் நிலையில் உள்ள பஸ்களும் வர்ணம் பூசப்பட்டு தற்போது களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. சில பஸ்கள் பாதி வழியில் நின்று, பயணிகளை தவிக்கவிடுகின்றன.
புகை கக்கும் வாகனங்களால் பாதசாரிகள் மூச்சு திணறுகின்றனர். திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகூர், வேளாங்கன்னி போன்ற நீண்ட தூரம் இயக்கப்படும் பஸ்கள், மிகவும் பழமையான
பஸ்களாக இருப்பதால் பயணிகள் மிகவும் அவஸ்தைபட்டு வருகின்றனர்.
தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""தொழில்நுட்ப பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பஸ்களை பழுது நீக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. உதிரி பாகங்கள் இல்லாததால் பல பஸ்கள் "ஷெட்டு'க்குள் முடங்கி கிடக்கின்றன,'' என்றார்.
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோவன் கூறியதாவது: நல்ல நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களுக்கு மட்டுமே எப்.சி. (தகுதி சான்றிதழ்) வழங்கப்படும். அதேநேரத்தில், பஸ்கள் குறித்து புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
ராமநாதபுரம் கோட்ட மேலாளர் சாமுவேல்ஜோதிராஜ் கூறியதாவது: ஓராண்டு முதல் மூன்றாண்டுக்குள் இருக்கும் பெரும்பாலான பஸ்கள் மட்டுமே வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது.
தொழில் நுட்ப பிரிவுக்கு தற்போது பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகரில் ஓடும் பஸ்களில் உள்ள குறைபாடுகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
No comments:
Post a Comment