Saturday, 27 April 2013

ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை தடுக்க ஒரே மாத்திரை:


ஊட்டி: ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை தடுக்க, ஒரே ஒரு மாத்திரையை மட்டும் நிர்ணயிக்கும் ஆய்வை மேற்கொண்டுள்ள, பிரத்யேக கமிட்டி, இறுதி ஆய்வறிக்கையை, அடுத்த மாத இறுதிக்குள், மத்திய அரசிடம் சமர்பிக்கிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களுக்கு, ஒரு மாத்திரையை மட்டும் நிர்ணயிக்கும் ஆய்வை மேற்கொள்ள, மத்திய சுகாதார அமைச்சகம், இதற்காக, ஐவர் கமிட்டியை அமைத்துள்ளது. இதன் தலைவர், டாக்டர் கோகாட், ஊட்டியில் நடந்த பார்மசிக்கல்லூரி மாணவர் காங்கிரசில் பங்கேற்றார். பின், நிருபர்களிடம் அவர், கூறியதாவது: ஒன்று, இரண்டுக்கு மேற்பட்ட நோய்களுக்கு, ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வழங்கும் சிகிச்சை முறை நடைமுறையில் உள்ளது. இதை சரியான முறையில் ஆய்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட மாத்திரைகளை பரிந்துரைக்கும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகம் ஐவர் கமிட்டியை அமைத்துள்ளது. இக் குழு இதுவரை, மூன்று கூட்டங்களை நடத்தி, மருந்தாக்கியல் துறையில், அரசு சாரா அமைப்பினர், பொதுமக்கள், கல்வியாளர்கள் என, பலதரப்பட்டோரின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது. குழுவின் கூட்டம், வரும் 3, 4ம் தேதிகளில், மும்பையில் நடக்கவுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள், இக்குழு தன் இறுதி அறிக்கையை அரசுக்கு அனுப்பும். "நோவார்ட்டிஸ்' என்ற பன்னாட்டு நிறுவனம், தாங்கள் உற்பத்தி செய்த, ரத்தப்புற்று நோய் மருந்தின் காப்புரிமையை யாருக்கும் வழங்க கூடாது, என, சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இது, மருந்தாக்கியல் துறைக்கு சாதகமான விஷயமாக அமைந்துள்ளது. கோர்டின் இந்த உத்தரவை ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் போன்ற பல நாடுகள் வரவேற்றுள்ளன. இம்மருந்து உற்பத்தி மூலம், ரத்தப் புற்றுநோய்க்குரிய மருந்தின் விலை, பல மடங்கு குறையும். இவ்வாறு, டாக்டர் கோகாட் கூறினார்.

No comments:

Post a Comment