Thursday, 25 April 2013

மெரீனா, எலியட்ஸ் கடற்கரையில் பணம் பறிக்கும் கும்பல்


சென்னை: மெரீனா, எலியட்ஸ் கடற்கரையில் மிரட்டி பணம் பறிக்கும், கும்பல் நடமாட்டத்தால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

கோடம்பாக்கத்தை சேர்ந்த அருண் என்பவர், நேற்று முன்தினம் குடும்பத்துடன், மெரீனா கடற்கரையில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை மிரட்டி, அவரிடம் இருந்த அலைபேசி, பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியதையொட்டி, மெரீனா மற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு வரும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், வழக்கமாக, சொற்ப எண்ணிக்கையிலான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம் சில்மிஷம், செயின் பறிப்பு, வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற, சமூக விரோத செயல்களில் ஈடுபடும், கும்பல்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. தனியாக இருக்கும் காதல் ஜோடிகளிடம் தான், இந்த கும்பல்கள் தங்கள் கைவரிசையை அதிகம் காட்டுகின்றன. வெளியில் சொன்னால், அவமானம் என நினைத்து, பலர் காவல் நிலையத்தில் புகார் செய்வதில்லை. பெரும்பாலும், மெரீனா கடற்கரைச் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, சில கும்பல்கள் தான், தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்களால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

No comments:

Post a Comment