Thursday, 25 April 2013

மாணவிகளுக்கு உடைகட்டுப்பாடுஎதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள்

மாணவிகளுக்கு உடைகட்டுப்பாடு: தலைமை ஆசிரியருக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு

பெண்குழந்தைகள் நவநாகரீகமாக உடை அணிவது குறித்து பெற்றோர்கள் கண்டிப்பது உண்டு. தனது பெண் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்களே நம் நாட்டில் இல்லை . ஆனால், அமெரிக்காவின் நியு ஜெர்சி நகரில், தலைமை ஆசிரியர் விதித்த  கட்டுப்பாட்டிற்கு எதிராக, மாணவியரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

நியு ஜெர்சி நகரின் ரெடிங்க்டன் குடியிருப்பில் உள்ள, ரெடிங்க்டன் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றிற்கு மாணவிகள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டனர். அதற்கு அணியும் உடை, தோள்பட்டைகள் தெரியா வண்ணம் இருக்கவேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷரன் மொப்பட், அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கு சென்ற மாதம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அத்தகைய உடைகள் மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் என்று அதற்கு விளக்கமும் அளித்திருந்தார். இந்த விளக்கத்தை அந்தப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகள், தங்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாகும் என்றும், ஜூன் மாதம் 12ஆம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு முன்னர், இந்த விதிமுறை மாற்றப்படவேண்டும் என்றும், மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் ஒன்றுகூடி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். ஆறு வருடங்களுக்கு முன்னால், தன்னுடைய பெரிய பெண் கையில்லாத உடை அணிந்து ஆடியபோது, தன்னுடைய இளைய மகள் மட்டும் அதுபோல் அணியக்கூடாது என்று சொல்லுவது நியாயமில்லை என்று ஒரு மாணவியின் தாய் குறிப்பிட்டார்.

நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெறும் விருந்திற்கு, தான் அதுபோன்ற தோள்பட்டை தெரியும் உடையில்தான் வருவேன் என்றும் ,மாணவர்களும் அவர்களின் நடத்தையில் கவனம் செலுத்தவேண்டும் என்றும், 14 வயது மாணவி ஒருவரும் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கும், பள்ளியில் நடக்கும் விழாக்களுக்கும் என குறிப்பிட்ட சில வரையறைகள் உலகம் முழுவதிலும் பின்பற்றப்படுகின்றன. சில பெற்றோர்களுக்கு இந்த விதிமுறைகள் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், சமூக சூழ் நிலை கருதி அவர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது என்று மாவட்டக் கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment