Monday, 8 July 2013

செகந்திராபாத்தில் ஓட்டல் இடிந்து 12 பேர் பலி


ஐதராபாத் : ஆந்திராவில், 80 ஆண்டு பழமையான ஓட்டல் நேற்று திடீரென இடிந்து விழுந்ததில், 12 பேர் இறந்தனர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர். இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படும், ஆந்திர தலைநகர், ஐதராபாதை ஒட்டியுள்ள செகந்திராபாத்தில், நேற்று காலை, 6:30 மணிக்கு, ஈரான் நாட்டினரால் நடத்தப்பட்ட, 80 ஆண்டு பழமையான ஓட்டல் திடீரென இடிந்து விழுந்தது.

மாநகராட்சி "நோட்டீஸ்' : இரண்டு மாடிகளைக் கொண்டிருந்த அந்த கட்டடம், வெளியே இருந்து பார்ப்பதற்கு புதிய கட்டடம் போல காட்சியளித்தாலும், உட்புறச் சுவர்கள் மிகவும் வலுவிழந்து காணப்பட்டன. கான்கிரிட் இல்லாமல், செங் கற்களால் கட்டப்பட்ட அந்த கட்டடத்தை, இடிக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி நிர்வாகம், "நோட்டீஸ்' அளித்திருந்தது. நேற்று லேசான மழை பெய்து கொண்டிருந்த நிலையில், அந்த ஓட்டல் இடிந்து நொறுங்கியது. இதில், ஓட்டல் உரிமையாளர் மகன் உட்பட, 12 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். கட்டடம் இடிந்த சத்தம் கேட்டு, அங்கு கூடிய மக்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்தனர். இரண்டு மாடியும் நொறுங்கியதால், கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க, கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நீண்ட போராட்டத்திற்கு பிறகே, இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். 

ரம்ஜான் பண்டிகை : இது குறித்து, மாநகர பிளானிங் கமிஷனர் ரகு கூறுகையில், ""பழமையான கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என, அறிவுறுத்தி வருகிறோம். 75 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை, இடிக்கச் சொல்லி வருகிறோம். இனிமேல், 60 ஆண்டுகள் ஆனகட்டடத்தையும் இடிக்க 
வலியுறுத்துவோம்,'' என்றார். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால், உணவு பண்டங்கள் தயாரிக்க, ஓட்டலின் மொட்டை மாடியில், பெரிய அளவில் அடுப்பு மற்றும் சமையலறை கட்ட, ஏராளமான தளவாட சாமான்கள் இருப்பு வைக்கப்பட்டதால், பளு தாங்காமல், பழமையான அந்த கட்டடம் இடிந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment