Thursday, 11 July 2013

வரதட்சணையால் நின்ற திருமணத்தில் தகராறு


விருதுநகர்: விருதுநகர் கோவிலில், நேற்று நடக்க இருந்த திருமணம், வரதட்சணை பிரச்னையால் நின்றது. இதை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், காயமடைந்த மணமகன், அரசு மருத்துவனையில் சிகிச்சை பெறுகிறார்.

விருதுநகரைச் சேர்ந்த, சமுத்ராதேவி மகன், துரை முருகன், 31. காஞ்சிபுரம் விஜயா வங்கி மேனேஜரான இவருக்கும், சகுந்தலா தேவி, 25, என்பவருக்கும், நேற்று காலை, 6:15 முதல், 7:15 மணிக்குள், விருதுநகர் வால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. வரதட்சணையாக, 60 சவரன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக, மணமகள் வீட்டில் கூறியிருந்தனர். நேற்று காலை, 6:30 மணிக்கு, மணமகள் அணிந்திருந்த நகைகளை பார்த்த மணமகன் குடும்பத்தார், "கவரிங் நகைகளாக உள்ளன; தங்க நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாயை நேரில் காட்டினால் தான், திருமணம் நடக்கும்' என, கறாராக கூறினர். "தங்க நகைகளை காரில் எடுத்து வருகின்றனர்; நல்ல நேரம் முடிவதற்குள், திருமணத்தை நடத்தி விடுவோம்' என, பெண் வீட்டார் கூறினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். காயமடைந்த மணமகன், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கூடுதல் வரதட்சணை கேட்டு, திருமணத்தை நிறுத்தி விட்டதாக, மணமகளின் தந்தையும், "மணப்பெண்ணுக்கு தாலி செயின் ஏன் எடுக்கவில்லை என கேட்டதற்கு, எங்களை அடித்து விட்டனர்' என, மணமகனின் தாயும், போலீசில் புகார் கொடுத்தார். இருதரப்பு புகாரை விசாரித்த போலீசார், மணமகனின் தாய் சமுத்ரா தேவியை கைது செய்து, மணமகன் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment