Thursday, 11 July 2013

ஆள் கடத்தல் வழக்கில் சவுதி இளவரசி கைது

அமெரிக்கா: ஆள் கடத்தல் வழக்கில் சவுதி இளவரசி கைது


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பணிப்பெண் ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தி தங்கவைத்துள்ளதால், ஆள் கடத்தல் வழக்கின் அடிப்படையில் சவுதி இளவரசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு, 30 வயதுடைய கென்யா நாட்டுப் பெண் ஒருவர் வேலைக்காக சவுதி அரேபியா அழைத்து வரப்பட்டார். அங்கு வந்ததும் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இளவரசி மெஷேல் அலேபன் அவரை வீட்டு வேலைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

அங்கு அவர் அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். சம்பளமும் பேசியதைவிட குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 1,600 டாலர் மாத சம்பளமாக பேசப்பட்ட அவருக்கு மாதம் 200 டாலர்தான் வழங்கப்பட்டுள்ளது. வெளியே செல்வதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அந்தப் பெண் தன்னுடைய உடைமைகளுடன் யாருக்கும் தெரியாமல் ஒருநாள் அங்கிருந்து வெளியேறி பேருந்தில் பயணித்துள்ளார். ஒரு நிறுத்தத்தில் இறங்கியபோது அருகில் இருந்தவரிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளார். அவர் உதவியுடன் கொடுத்த புகாரின் பேரில், மெஷேல் கைது செய்யப்பட்டார். 

வழக்கு விசாரணையின்போது, பணியாட்கள் ஒப்பந்ததாரரின் தவறான செயல்முறையினால் ஏற்பட்ட பிரச்சினை இது என்று இளவரசி தரப்பில் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த செயல் ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்திருப்பது போலாகும் என்று தெரிவித்தார். 

இளவரசி மெஷேல் அலேபனுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஜாமீன் அளித்த நீதிபதி, வழக்கு முடியும்வரை அவர் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், நீதிமன்ற மேற்பார்வையில் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மெஷேலுக்கு 12 வருட சிறைவாசம் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment