பூந்தமல்லி : போதையில் தவறாக நடக்க முயன்ற கோயில் பூசாரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை சுடுகாட்டில் கற்களால் மறைத்துவிட்டு தப்பிய நண்பனை போலீசார் தேடி வருகின்றனர். போரூர் அருகே கெருகம்பாக்கம் டாக்டர் சிவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் அரிகிருஷ்ணன் (30). திருமணம் ஆகவில்லை. அரவாணி என கூறப்படுகிறது. அதே பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். தினமும் பூஜை முடிந்ததும் கோயிலிலேயே தங்கி விடுவார். நேரம் கிடைக்கும்போது வீட்டுக்கு சாப்பிட வருவார்.
கடந்த சில நாட்களாக அரிகிருஷ்ணன் வீட்டுக்கு வரவில்லை. இதனால், சிவா நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு சென்று மகனை தேடினார். அவர் அங்கு இல்லாததால் வேறு எங்காவது சென்றிருப்பார் என வீட்டுக்கு திரும்பிவிட்டார். இந்நிலையில், கெருகம்பாக்கம் சுடுகாட்டில் வாலிபர் சடலம் கிடப்பதாக மாங்காடு போலீசா ருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் சுடுகாட்டுக்கு சென்று பார்த்தனர். தகன மேடையில் உள்ள கற்களுக்கு அடியில் ஒரு வாலிபரின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. போலீசார் கற்களை அப்புறப்படுத்தி, சடலத்தை வெளியே எடுத்தனர். வாலிபரின் தலை நசுங்கியிருந்தது. கல்லால் தலையில் அடித்து கொலை செய்து, சடலத்தை மறைத்து வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோயில் பூசாரி அரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் கிடைத்த தகவல்கள் வருமாறு: அரிகிருஷ்ணனுக்கு நிறைய நண்பர்கள் இருந்துள்ளனர். தனக்கு கிடைக்கும் பணத்தில் நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து இரவில் அவர்களுடன் ஜாலியாக பொழுதை போக்கியுள்ளார். கடந்த 19ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர் ராஜேசுக்கு (29) மது விருந்து கொடுக்க கெருகம்பாக்கம் சுடுகாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். தயாராக டாஸ்மாக் கடையில் மது வாங்கி வைத்திருந்தார். இருவரும் மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு ராஜேஷ் தலைமறைவாகி விட்டார்.
இதுதொடர்பாக ராஜேசின் தம்பி விஜயகுமார் கூறுகையில், ‘‘கடந்த வெள்ளிக்கிழமை இரவு ராஜேஷ் வீட்டுக்கு பதற்றத்துடன் வந்தான். சரக்கு அடிக்க கெருகம்பாக்கம் சுடுகாட்டுக்கு போனதாகவும், போதையில் அரிகிருஷ்ணன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் கல்லால் அடித்துவிட்டு வந்து விட்டதாகவும் கூறினான். பின்னர் வெளியே சென்றுவிட்டான்” என்று கூறியுள்ளார். இதையடுத்து தனிப்படை போலீ சார் காஞ்சிபுரம், குன்றத்தூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் ராஜேஷை தேடி வருகின்றனர். பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment