பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் பிரான்சில் கலவரம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
பிரான்சில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைநகர் பாரீசின் புறநகரில் உள்ள டிராபிஸ் பகுதியில் பர்தா அணிந்து சென்ற பெண்ணுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணின் கணவர் போலீஸ் அதிகாரியுடன் தகராறு செய்தார். எனவே, அவர் கைது செய்யப்பட்டார்.
இதை அறிந்ததும் சுமார் 250 முஸ்லிம்கள் டிராபிஸ் நகர் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு திரண்டனர்.
அதை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் கலவரமாக மறியது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள்.
ரோட்டில் வைத்திருந்த குப்பை தொட்டிகள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் உள்ள பயணிகள் நிழற்குடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. எனவே நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அப்படியும் நிலைமை கட்டுக்குள் வராததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில், 14 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தான். போராட்டக்காரர் கள் தாக்கியதில் 4 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அங்கு அமைதி ஏற்பட்டு சகஜ நிலை நிலவுகிறது.
No comments:
Post a Comment