அகமதாபாத் : குஜராத் கலவரத்தின்போது சரியான முறையில் செயல்பட்டேன் என்று முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது வன்முறையை கட்டுப்படுத்த முதல்வர் நரேந்திர மோடி தவறி விட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நரேந்திர மோடி பேட்டி அளித்துள்ளார். 2002 கலவரத்தின்போது தவறு செய்து விட்டதாக வருந்தியது உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்து மோடி கூறியதாவது:
2002ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரத்தின்போது நானும் குஜராத் அரசும் எந்த தவறும் செய்யவில்லை. முதல்வர் என்ற முறையில் நான் சரியாகவே செயல்பட்டேன். ஏதேனும் தவறு செய்திருந்து குற்றம் சாட்டப்பட்டால்தான் வருத்தமும் குற்ற உணர்ச்சியும் ஏற்படும். ஆனால், எந்த தவறும் செய்யாதபோது நான் ஏன் வருந்த வேண்டும்?
கலவரம் குறித்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. அந்த குழுவின் அறிக்கை என் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி எனக்கு முழுமையான நற்சான்று அளித்துள்ளது.
அதேநேரம், நடந்த சம்பவங்கள் எனக்கு வேதனையை அளித்தன. ஒரு காரை நாம் ஓட்டிக் கொண்டோ அல்லது பின் இருக்கையில் அமர்ந்து கொண்டோ செல்லும்போது காரின் குறுக்கே ஒரு சிறிய நாய்க்குட்டி வந்து அடிபட்டால் நமக்கு வருத்தம் இருக்குமா? இருக்காதா? நான் முதல்வராக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன். எங்கே மோசமான சம்பவங்கள் நடந்தாலும் வருத்தம் ஏற்படுவது இயற்கை என்றார் மோடி.
‘நான் இந்து தேசியவாதி’
நீங்கள் வளர்ச்சியை விரும்பும் முதல்வரா? அல்லது இந்து தேசியவாதியா? உண்மையான மோடி யார்? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த மோடி, ‘‘நான் தேசியவாதி. நாட்டுப்பற்று மிக்கவன். இந்துவாக பிறந்ததால் இந்து தேசியவாதி. இதில் எந்த தவறும் இல்லை. வளர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தாலும் இந்து தேசியவாதி என்றாலும் இரண்டிலும் எந்த முரண்பாடும் இல்லை. இரண்டும் ஒன்றுதான்’’ என்றார்.
No comments:
Post a Comment