Sunday, 14 July 2013

லண்டன் மசூதியில் குண்டு வெடித்தது


லண்டன் மசூதியில் குண்டு வெடித்தது
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் உள்ள டிப்டோன் என்ற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. நோன்பு தொடங்கியபின் நேற்று முன்தினம் முதல் மதிய வேளைத் தொழுகைக்கு அங்கு முஸ்லிம் மக்கள் வரத்தொடங்கினர். பொதுவாக மதியம் ஒரு மணிக்குத் தொடங்கும் பிரார்த்தனை நேரம் இரண்டு மணிக்கு என்று மாற்றப்பட்டிருந்தது. அங்கு வெடிகுண்டு தாக்குதல் இருக்கக்கூடும் என்ற ஒரு அச்ச உணர்வு காவல் துறையினரிடையே நிலவியது.

சிறிது நேரத்தில் 1.06 மணிக்கு ஒரு பெரிய சப்தம் கேட்டபோது, வெடிகுண்டு வெடித்ததாகக் காவல்துறையினர் கூறினர். இந்தப் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான அட்ரியன் பெய்லி, ஆணி வெடிகுண்டு ஒன்று மசூதியின் வெளிப்புறம் உள்ள மழைநீர் வடிகுழாய் மேலே பொருத்தப்பட்டிருந்ததாகக் கூறினார். அந்த இடத்தில்தான் மக்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்வர். தொழுகை நேரத்தை மாற்றியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடம் காவல் வளையத்திற்குள் வந்தது. காவல்துறையினர் இந்த சம்பவத்தைத் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று கருதினர். வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியின் தீவிரவாத எதிர்ப்பு மையம் உடனடி விசாரணையைத் துவங்கியது. யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்த காவல்துறையினர், மக்கள் வந்தபின் வெடிகுண்டு வெடித்திருந்தால் விளைவுகள் மோசமாக இருந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

சென்ற மே மாதம் லீ ரிக்பி என்ற ராணுவ வீரர் இரண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதிலிருந்தே, சமூகம் குறித்த பதட்டங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த இருவரும் நவம்பரில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்தக் கொலைக்குப் பின்னர், இடதுசாரிக் குழுவினர் அடிக்கடி இஸ்லாமியர்களுக்கு எதிரான பேரணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment