அவிநாசி: கோவை மாவட்டம், சோமனூரை சேர்ந்த துரைசாமி மகன் வடிவேல்மோகன், 36; விசைத்தறி கூடம் வைத்துள்ளார். இவருக்கும், அவிநாசி அருகே உப்பிலிபாளையம் ஊராட்சி, காரைக்கால்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகள் சாந்திக்கும், 23, ஐந்து ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்றரை வயதில் சாம்பவி என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமானதில் இருந்தே மனைவி மீது, சந்தேகம் கொண்ட வடிவேல் மோகன், அடிக்கடி சண்டை போட்டு வந்தார். அடுத்தடுத்த மாதங்களில், சண்டை வலுத்தது. ஒரு கட்டத்தில், சாந்தியை கொலை செய்ய வடிவேல் மோகன் திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். கடந்த 5ம் தேதி இரவு மனைவியை, தனது பைக்கில் அழைத்து கொண்டு, நீலம்பூரிலுள்ள தியேட்டருக்கு, சினிமாவுக்கு அழைத்துச் சென்றார். படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், கரவழி மாதப்பூர் ரோட்டில், சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்தியுள்ளார். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மூன்று பேர், இரும்பு ராடால், சாந்தி தலையில் பலமாக தாக்கினர். மயக்கமுற்ற சாந்தியை, அதே இடத்தில் ரோட்டில் படுக்க வைத்து, காரை (டிஎன் 39 ஏசி 9868) ஏற்றி கொலை செய்துள்ளனர். அதேயிடத்தில், வடிவேல்மோகனும் படுத்துக் கொண்டு, தனது மாமன் மகன் செந்தில்குமாரிடம் மொபைல்போனில், "அடையாளம் தெரியாத கார் மோதியதில், சாந்திக்கு தலையில் அடிபட்டு விட்டது. எனக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே வா,' என்று அழுதுள்ளார். உறவினர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார், விபத்து வழக்காக பதிவு செய்து, சாந்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். அதன்பின், சோமனூரில் சாந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, சாந்தி சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர்கள் கோவை எஸ்.பி., சுதாகரனுக்கு தெரியப்படுத்தினர்.
விபத்தில் சாந்தி இறந்தாரா?
வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பன உள்ளிட்ட பல விஷயங்களை தீவிரமாக விசாரணை செய்யுமாறு, கருமத்தம்பட்டி போலீசாருக்கு எஸ்.பி., சுதாகர் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் காளியண்ணன் மற்றும் போலீசார், வடிவேல்மோகன் உறவினர்கள் மற்றும் சாந்தி உறவினர்கள், குடியிருந்த வீட்டருகே வசிப்பவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் கூறுகையில், "கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. வடிவேல்மோகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், சாந்தியை கொலை செய்து, அவரை திருமணம் செய்ய திட்டமிட்டார். அதற்காக, கடந்த ஒரு ஆண்டாக சதி திட்டம் தீட்டியுள்ளார். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வடிவேல்மோகன், வாளையாரை சேர்ந்த சண்முகத்திடம் காரை வாங்கி, அவனது மூன்று நண்பர்களை வைத்து கொலை செய்துள்ளான்,' என்றனர். சாந்தியை கொலை செய்த அவரது கணவன் வடிவேல் மோகன், கூட்டாளிகள் பாலக்காட்டை சேர்ந்த சுரேஷ்குமார், 27, வாளையாரை சேர்ந்த ஹக்கீம், 32 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அனில்குமாரை தேடி வருகின்னர். கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment