Friday, 12 July 2013

அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்பவர்களே தவிர, அவர்களின் எஜமானர்கள் அல்ல !சென்னை உயர் நீதிமன்றம் -




அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்பவர்களே தவிர, அவர்களின் எஜமானர்கள் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலத்துக்கான இழப்பீடு தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை விவசாயிகள் அணுகினர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இழப்பீடு கோரி விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை சட்டப்படி ஆராய்ந்து அவர்களுக்கான இழப்பீட்டை வழங்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.
எனினும் இதுவரை தங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று கூறி விவசாயிகள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், நீதிமன்ற உத்தரவை மதிக்காத விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் இருவரும் இம்மாதம் 27-ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளித்து அமல்படுத்தாமல் கிடப்பில் போடுவது என்பது சில அரசு அதிகாரிகள் மத்தியில் தற்போது ஒரு வழக்கமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் வழக்கு தொடரும் மனுதாரர்களை அலைக்கழிப்பு செய்யும் அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நோட்டீஸ் அனுப்பினால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தங்களுக்கு நீதிமன்றம் அனுப்பும் நினைவூட்டல் கடிதமாக அதனை நினைத்துக் கொள்கின்றனர். அரசு அதிகாரிகள் என்பவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்கள். அவர்கள் மக்களின் எஜமானர்கள் அல்ல. ஆனால் இதனை மறந்து விட்டு அதிகாரிகள் சிலர் செயல்படுகின்றனர்.
இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காததை நீதிமன்றத்தின் பலவீனமாகக் கருதி விடக் கூடாது. அரசு அதிகாரிகளே இவ்வாறு நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதற்கு அனுமதிப்போமேயானால், வழக்காட வரும் பொதுமக்கள் நீதித் துறையின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும். அத்தகைய நிலை வரக் கூடாது என்று நீதிபதி சசிதரன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment