Monday, 29 July 2013

"நூறு கோடி ரூபாய் இருந்தால், ராஜ்யசபா எம்.பி., சீட் வாங்கிவிடலாம்-காங்கிரஸ், எம்.பி.


புதுடில்லி:""நூறு கோடி ரூபாய் இருந்தால், ராஜ்யசபா எம்.பி., சீட் வாங்கிவிடலாம்,'' என, காங்கிரஸ், எம்.பி., ஒருவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அரியானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் உள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த, காங்கிரஸ், ராஜ்யசபா எம்.பி., பிரேந்தர் சிங். 

பதவி கிடைக்கவில்லை:

முதல்வர், ஹூடாவின் எதிர்ப்பாளராக விளங்கும் இவரை சமாதானப்படுத்த, மத்திய அரசு, மத்திய இணையமைச்சர் பதவி வழங்க இருந்தது. சமீபத்தில், மாற்றியமைக்கப்பட்ட, மத்திய அமைச்சரவையின் போது, பிரேந்தர் சிங்குக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், வழங்கப்படவில்லை.காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் போது, இவரிடம் இருந்த, பொதுச் செயலர் பொறுப்பு பறிக்கப்பட்டது. இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த அவர், இந்த மாற்றங்களுக்குப் பிறகு, கட்சிக்கு எதிராக பேசத் துவங்கியுள்ளார்.

ரூ.20 கோடி மிச்சம்:

அரியானாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரேந்தர் சிங் பேசியதாவது:நான் எம்.பி.,யாக ஆன போது, அந்தப் பதவியைப் பெற, நூறு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றனர். நான், 80 கோடி ரூபாய் கொடுத்து, எம்.பி., பதவியைப் பெற்று, 20 கோடி ரூபாய் மிச்சப்படுத்தி விட்டேன். நூறு கோடி ரூபாய் கொடுத்து, எம்.பி., பதவியைப் பெறுபவர்கள், ஏழை மக்களைப் பற்றி சிந்திப்பார்களா?ராஜ்யசபாவில் இருக்கும், எம்.பி.,க்களில் பலர் கோடீஸ்வரர்கள். அவர்களுக்கு, எம்.பி.,யாவது ஒன்றும் கடினமானதல்ல. இந்த காலத்தில், கோடீஸ்வரர்களால் தான், ராஜ்யசபாவுக்குள் நுழைய முடியும்.ஜனநாயகத்தில், பண ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், ஏழைகளின் குரல் மூழ்கடிக்கப்பட்டு விட்டது.இந்தக் கருத்து, என் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கட்சியின், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், இந்தக் கருத்தைக் கொண்டுள்ளனர். இப்படி ஏராளமானோர் கூறும் போது, ஆட்சியில் உள்ள கட்சியும், அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இப்படி ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவர் கூற முடியாது. அப்படி பேசுபவர், கட்சிக்கு எதிராக பேசியுள்ளார் என கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால், பலரும் கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை.இவ்வாறு, காங்கிரஸ் எம்.பி., பிரேந்திர் திங் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



No comments:

Post a Comment