மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து, பண்ணவாடி மற்றும் கோட்டையூர் பரிசல்துறைகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பண்ணவாடி பரிசல் துறையில் நேற்று பயணிகள் பரிசல் ஏறும் பகுதியில் சேலத்தில் இருந்து வந்த கும்பல் ஒன்று முகாமிட்டது. அங்கேயே விரிப்புகள் போட்டு சமைத்தனர். மது பாட்டில்களை வாங்கி வந்து, பரப்பி வைத்து குடித்து கும்மாளமிட்டனர். போதை அதிகமாகவே பரிசல் துறைக்கு செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்தனர்.
அப்போது, அங்கு வந்து கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார், அவர்களை தடியால் அடித்து விரட்டினர். இதனைக் கண்டதும் மற்ற பகுதிகளில் பாறை இடுக்கில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘கும்பல், கும்பலாக காரிலும், டெம்போக்களிலும் வருவோர் பண்ணவாடி பரிசல் துறை பகுதியை திறந்த வெளி ‘பார்‘ ஆக மாற்றி உள்ளனர். நாள் ஒன்றுக்கு ஒரு மூட்டை பாட்டில்களை முதியவர் ஒருவர் சேகரித்து விற்பனைக்காக எடுத்துச் செல்கிறார். மதுபோதையில் வருவோர் குற்றச்செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. அவர்கள் போதையில் காவிரியில் குளிக்கும் போது, உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே, குடிமகன்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்,‘‘ என்றனர்.
No comments:
Post a Comment