மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில், இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மூன்றடுக்கு, குடும்ப கல்லறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. "கீழை நாடுகளின் ஸ்காட்லாந்து' என, ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது, மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங். கடல் மட்டத்திலிருந்து, 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய நகரம், 1972ம் ஆண்டு வரை, ஒருங்கிணைந்த அசாமின் தலைநகராக விளங்கியது. அசாம் மாநிலத்திலிருந்து, மேகாலயா பிரிந்த பிறகு, இந்த சிறிய நகரம், மேகாலயாவின் தலைநகரானது. அசாமிற்கு, திஸ்பூர் தலைநகரானது. வட கிழக்கு மாநிலங்களில், மிக அழகிய இந்த நகரில் குடியேற பலரும் விரும்புவதால், இந்நகரத்தில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாகியது.
இந்நகரின் பெரும்பான்மை மதத்தினராக, கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்களின் வழக்கப்படி, இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால், ஷில்லாங்கில், அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் கல்லறை தோட்டத்தில், இடம் இல்லாததால், இறந்தவர்கள் உடலை புதைக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
இந்த பிரச்னையை தவிர்க்கும் வகையில், கல்லறை தோட்டத்திற்கு அருகில், மூன்று மாடியில், குடும்ப கல்லறை கட்டடம் கட்டப்பட்டது. அதில், கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்களின் மிச்சங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆன பிறகு, அந்த இடத்தில், சிறிதளவு எலும்பு மிச்சங்களே இருக்கும். அவை, கல்லறையிலிருந்து எடுத்து, குடும்ப கல்லறை கட்டடத்தில் வைக்கப்படுகின்றன. குறைவான இடத்தில், அவை வைக்கப்படுவதால், நிறைய உடல்களின் மிச்சங்களைப் பாதுகாக்க முடிகிறது.முதலில் இந்த முø றக்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியது. "கிறிஸ்தவர்களின் வழக்கத்திற்கு மாறாக, புதைக்கப்பட்டவர்களின் உடல்களை தோண்டி எடுப்பதா?' என, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"எதிர்காலத்தில் உடல்களை புதைக்கவே முடியாத நிலை ஏற்பட்டு விடும்' என, நகர நிர்வாகம் சார்பில், முறையாக அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, அடுக்கு மாடி கல்லறையில், உடல்களின் மிச்சங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment